கேரளாவில் பருவமழை கொட்டுவதால், குற்றாலத்திற்கு தண்ணீர் வருகை அதிகரித்து சீசன் களைகட்டியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டது. மற்ற மாவட்டங்களிலும் மழை தீவிரமடைந்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த 24 மணிநேரத்திற்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்றும், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோழிக்கோடு, கண்ணூர், கோட்டயம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், கேரளாவில் கொட்டும் கனமழையால், குற்றாலத்திற்கு தண்ணீர்வரத்து அதிகமாகி இருக்கிறது. இதனால், சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. வழக்கமாக, ஜூலை முதல் வாரத்திலேயே சீசன் தொடங்கி விடும். இந்த ஆண்டும் கடந்த 10 நாட்களுக்கு முன்பே அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் இப்போதுதான் சீசன் களைகட்டி இதமான சாரல் காற்றும், மழையுமாக உள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று காலை முதல் குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கன மழை; ரெட் அலர்ட் எச்சரிக்கையால் அணைகள் திறப்பு