கர்நாடக அரசியலில் புயலுக்கு பின் அமைதி சபாநாயகரின் முடிவு என்ன?- திக்.. திக்.. எதிர்பார்ப்பில் பாஜக

Big silence in Karnataka politics, all eyes on speakers decision on rebel MLAs resignation

by Nagaraj, Jul 25, 2019, 10:21 AM IST

கர்நாடக அரசியலில் 2 வாரங்களுக்கும் மேலாக வீசிய சூறாவளி குமாரசாமி அரசை காவு வாங்கி விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் முக்கிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அமைதி காக்கின்றனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் ரமேஷ்குமார் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே, ஆட்சியமைக்க உரிமை கோரும் முடிவில் பாஜக தரப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரின் ராஜினாமா விவகாரத்தால் 2 வாரங் களுக்கும் மேலாக அம்மாநிலத்தில் பெரும் அரசியல் சூறாவளி வீசியது. கடைசி வரை அதிருப்தியாளர்கள் பிடிவாதம் காட்ட, நம்பிக்கை வாக்கெடுப்பில் மெஜாரிட்டி இழந்த குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்து விட்டது.

இதனால் கர்நாடக அரசியலில் அடுத்து என்ன காட்சிகள் அரங்கேறப் போகிறது என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், கட்சிகளிடையே பெரும் அமைதி நிலவுகிறது. குமாரசாமி ராஜினாமா செய்தவுடனே, பாஜக தலைவர் எடியூப்பா, கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப் போகிறார் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி, பாஜக தொண்டர்களும் செவ்வாய்கிழமை இரவே கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் இன்னும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டமே நடத்தப்படாமல் அமைதி காக்கின்றனர். ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக பாஜக மேலிடத் தலைவர்களின் கிரீன் சிக்னல் இன்னும் கிடைக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்.

ஏனெனில், எடியூரப்பாவால் ஏற்கனவே இரண்டு முறை பாஜக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவமானப்பட்டுள்ளது. 2007-ல் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை நம்பி சோரம் போன எடியூரப்பா, 7 நாட்களில் பதவி இழந்தார், கடந்த 2018-ல் தேர்தல் முடிந்தவுடன், பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற ரீதியில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரியது. 15 நாட்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் ஆளுநரும் பாஜக ஆட்சியமைக்க ஒத்துழைத்தார்.மாற்று கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரம் பேசி இழுத்து விடலாம் என்ற நினைப்பில் எடியூரப்பாவும் முதல்வரானார்.

ஆனால் நடந்ததோ வேறாகிவிட்டது. காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் திடீரென கூட்டு சேர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 15 நாள் அவகாசம் கொடுத்ததை எதிர்த்து நள்ளிரவில் உச்ச நீதிமன்ற கதவை தட்டினர். இதனால் உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக இரவோடு இரவாக இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதிகள், எடியூரப்பாவுக்கு அவகாசம் கொடுக்காமல் உடனடியாக மறு நாளே மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டனர். இதனால் கதிகலங்கிப் போன எடியூரப்பா, வேறு வழியின்றி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலே இரண்டரை நாட்களில் ராஜினாமா செய்ய நேர்ந்தது.

இதே போன்ற கசப்பான அனுபவங்கள் மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என பாஜக மேலிடம் கருதுவதாகத் தெரிகிறது. இந்த முறை அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்களில் பலருக்கு அமைச்சர் பதவி தருவதாக உத்தரவாதம் கொடுத்தே பாஜக அவர்களை வளைத்தது என்பது ஊரறிந்த விஷயமாகி விட்டது. அதே போல் சுயேட்சை எம்எல்ஏக்களான நாகேஷ், சங்கர் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி தருவதாகக் கூறித்தான் அணி மாறச் செய்தது. ஆனால் இவர்களை எந்தளவுக்கு நம்பி ஆட்சியில் அமர்வது என்று பாஜக மேலிடம் மிகவும் யோசிப்பதாகத் தெரிகிறது.

இதே போல், அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்காமல், அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து விட்டால், நிலைமை மேலும் சிக்கலாவிடும் என்றும் பாஜக தரப்பு எண்ணுகிறது. இதனால் சபாநாயகர் முடிவைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை என பாஜக மேலிடம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் முதல்வர் நாற்காலியில் உடனடியாக அமரத் துடிக்கும் எடியூரப்பாவோ அவசரம் காட்டுவதாகத் தெரிகிறது. இதனால் மேலிடத் தலைவர்களை சமாதானப்படுத்த, மாநில ஆர்எஸ்எஸ் தயவையும் நாடியுள்ள எடியூரப்பா, கர்நாடக பாஜக தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், மாதுசாமி, போப்பையா உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றையும் டெல்லி அனுப்பி வைத்துள்ளார்.

பாஜக தரப்பில் இப்படிப்பட்ட நிலை என்றால், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளும் பெரும் அமைதி காக்கின்றன. அரசு கவிழ்ந்த நிமிடம் முதல் இரு கட்சித் தலைவர்களும் ஒன்று சேர்ந்து ஆலோசனை ஏதும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால் இரு கட்சிகளிடையே உரசல் ஏற்பட்டு, தனித்தனி வழியில் பயணிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை இரு கட்சித் தலைவர்களும் இன்னும் உறுதி செய்யவில்லை என்றாலும், ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் பாஜக எடுத்துவரும் முயற்சிகளை அமைதியாக வேடிக்கை பார்ப்பதாகவே தெரிகிறது.

இதனால் தற்போதைக்கு கர்நாடக சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதிலேயே அனைவரின் கவனமும் உள்ளது. சபாநாயகர் ரமேஷ்குமாரும், ஒரு சபாநாயகரின் அதிகாரம் என்ன?பலம் என்ன? என்பதை இரு நாட்களில் காட்டப் போகிறேன் என்று கூறி, பணமே பிரதானமாகிப் போய் விட்ட அரசியல்வாதிகள் மனிதர்களே அல்ல என்று கர்நாடக அரசியல் நிகழ்வுகளை கடுமையாக சாடியிருந்தார். இதனால் அரசியலைப் பு சட்ட விதிகளை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் சபாநாயகர் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ? என்ற திக்.. திக்.. மனநிலையில் கர்நாடக அரசியல் கட்சிகள் அனமதி காக்கின்றன என்பதே தற்போதைய நிலை.சபாநாயகர் முடிவுக்குப் பின் அடுத்த கட்ட நாடகங்கள் கர்நாடக அரசியலில் அரங்கேறும் என்றும் எதிர்பார்க்கலாம்.

'பணமே பிரதானமாகி விட்டது; அரசியல்வாதிகள் மனிதர்களே அல்ல' - கர்நாடக சபாநாயகர் விளாசல்

You'r reading கர்நாடக அரசியலில் புயலுக்கு பின் அமைதி சபாநாயகரின் முடிவு என்ன?- திக்.. திக்.. எதிர்பார்ப்பில் பாஜக Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை