சிலை கடத்தல் வழக்கில் அமைச்சர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போதிய ஆதாரத்துடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் டிஎஸ்பியாக பணிபுரிந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காதர் பாட்சா,கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சர்வதேச சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவர் மீது பொன்மாணிக்க வேல் வழக்கு பதிவு செய்யவில்லை. தீனதயாளனுடன் கூட்டு சேர்ந்து அதிகாரத்தை பயன்படுத்தி என்னை பழிவாங்கும் நோக்கில் பொன்மாணிக்கவேல் என் மீது பொய் வழக்கு பதிவு செய்தார். அந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையான என்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தார்.
உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் அவர் தவறாக பயன்படுத்தி வருகிறார். பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.,க்கும், சிபிசிஐடிக்கும் புகார் மனு அளித்தேன். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு சிபிசிஐடி போலீசுக்கு உத்தரவிட வேண்டும் காதர் பாட்சா மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் அளித்த புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடி போலீசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தன்னையும் இணைக்குமாறு பொன்.மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிலைக்கடத்தல் வழக்கில் தமிழக அமைச்சர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரமும் இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து ஆதாரத்துடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பொன்.மாணிக்கவேல் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையையும் ஆகஸ்ட் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். சிலை கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொன்.மாணிக்கவேல் தரப்பில் கூறப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் யார்? என்பது குறித்து பெரும் விவாதவே நடைபெற்று வருகிறது.