வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலுக்கு இன்னும் எட்டு நாட்களே இடைவெளி உள்ள நிலையில், அனல் பறக்கும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று ஒரே நாளில் பிரச்சாரம் தொடங்குவதால், வேலூர் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.
மக்களவைப் பொதுத் தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா புகாரால் வேலூர் தொகுதியில் மட்டும் கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது வரும் 5-ந் தேதி இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 28 பேர் களத்தில் உள்ளனர். தேர்தல் ரத்து செய்யப்பட்ட போதும் கதிர் ஆனந்தும், ஏ.சி.சண்முகமுமே போட்டியாளர்களாக இருந்தனர். ஆனால் அப்போது வேட்பாளர்களை நிறுத்திய அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துவிட்டன.
மக்களவை பொதுத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற அதிமுக, மற்ற தொகுதிகளில் மண்ணைக் கவ்வியது. இதனால் வேலூரில் வெற்றி பெற்று இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டும் என கங்கணம் கட்டியுள்ளது அதிமுக. இதனால் ஒட்டுமொத்த அமைச்சர்கள், தமிழகம் முழுவதும் கட்சியின் நிர்வாகிகள் என களத்தில் இறக்கி விட்டுள்ளது அதிமுக. திமுக தரப்பிலும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் என பலரையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தியுள்ளதால் வேலூர் தேர்தல் களம் திருவிழா களையுடன் காணப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குவதால் தேர்தல் களமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வாணியம்பாடியில் இருந்து இன்று மாலை பிரச்சாரத்தை தொடங்கி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிக்கிறார். நாளை குடியாத்தம் தொகுதியிலும், 2-ம் தேதி அணைக்கட்டு மற்றும் வேலூர் சட்டப் பேரவை தொகுதிகளிலும் அவர் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இதே போன்று, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று முதல் 3 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். இரண்டாம் கட்டமாக, ஆகஸ்ட் 1,2 மற்றும்3-ம் தேதிகளிலும் அவர் பிரசாரம் செய்யவுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்றிரவே வேலூர் வந்த மு.க.ஸ்டாலின், இன்று காலை தமது வழக்கமான பாணியில் நடைப் பயிற்சி செய்து கொண்டே வாக்கு சேகரித்தார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சகிதம் வேலூர் உழவர் சந்தை பகுதியில் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இன்று மாலை கே.வி.குப்பத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 29-ந் தேதி முதல் 4 நாட்களுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து த மிழக பாஜக தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் அதிமுக படுதோல்வியடைந்தது என்ற கருத்து அதிமுகவில் ஒரு தரப்பினரிடம் நிலவி வந்தது.
இதனால் வேலூர் தொகுதியில் பாஜக பெயரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யவே அதிமுகவினர் யோசித்ததாக கூறப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென டெல்லி சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைவர் அமித் ஷாவைச் சந்தித்தார். அதன் பின் பல விஷயங்களிலும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை அதிமுக எடுக்கத் தொடங்கி விட்டது என்றே கூறலாம். கடந்த முறை முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதிமுகவின் 37 எம்.பி.க்களும் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து ஓட்டெடுப்பையும் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
ஆனால் தற்போது ஒரே ஒரு எம்.பி.யான ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் குமாரோ, முத்தலாக் மசோதாவை மக்களவையில் பகிரங்கமாக வரவேற்றுப் பேசி, ஆதரவாக ஓட்டும் போட்டார். இந்த வகையில் இப்போது வேலூர் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்களும் பங்கேற்க அதிமுக பச்சைக் கொடி காட்டியுள்ளது.
இஸ்லாமிய வாக்காளர்கள் பரவலாக உள்ள வேலூர் தொகுகுதியில், பாஜகவை துணைக்கு அழைத்துக் கொண்டு, அதிமுக களத்தில் இறங்கியுள்ளது அக்கட்சிக்கு சாதகமா? பாதகமா? என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.
வேலூர் மக்களவை தேர்தல்; இழுபறிக்குப் பின் கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்பு