பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தில் தமிழின் தோற்றம் குறித்த தவறு நீக்கப்படும் என்று அமைச்சர் விளக்கம்

Tamil language origin wrongly noted in 12th english book. It will be corrected : sengottaian

by எஸ். எம். கணபதி, Jul 27, 2019, 12:03 PM IST

பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தில் தமிழ்மொழியின் தோற்றம் குறித்து தவறான தகவல் இடம் பெற்றிருக்கிறது. இந்த தவறை உடனடியாக நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2018-19ம் கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதில் 12ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அட்டையில் பாரதியார் ஓவியம் வரையப்பட்டிருந்தது. அதில் பாரதியாருக்கு காவி நிறத்தில் தலைப்பாகை வரையப்பட்டிருந்தது. இதையடுத்து, ‘‘புதிய கல்விக் கொள்கை வரும் முன்பே இந்துத்துவாவை மத்திய பாஜக அரசு திணிக்கிறது. அதற்கு தமிழக அரசும் உடந்தையாக உள்ளது’’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், அது காவி நிறம் அல்ல, தேசியக் கொடியின் நிறம் என்று அரசு விளக்கம் கொடுத்தது.

இந்நிலையில், 12ம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் மொழிகளின் தொன்மை குறித்து ஒரு பாடம் உள்ளது. அதில், ஒவ்வொரு மொழியும் தோன்றிய ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்மொழி கி.மு. 300ம் ஆண்டில் தோன்றியதாக கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், 2300 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் மொழி உருவாகியதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம், சீன மொழி கி.மு. 1250, கிரேக்கம் கி.மு.1500 ஆம் ஆண்டுகளில் தோன்றியதாகவும் கூறப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதம் கி.மு.2000ம் ஆண்டில் தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ்மொழி என்று ஏற்கனவே மொழி ஆராய்ச்சியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு பல்வேறு ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இந்நிலையில், 12ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் இப்படி தவறாக கூறப்பட்டிருக்கிறது. கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் கருத்தைக் கொண்டு இப்படி தவறாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ‘‘தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறை திருத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உலகிலேயே மிக தொன்மையான மொழி தமிழ் மொழி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை’’ என்றார்.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; சூர்யாவுக்கு 'ரஜினி' பாராட்டு..! வைகோ, வைரமுத்து, சீமானும் ஆதரவு

You'r reading பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தில் தமிழின் தோற்றம் குறித்த தவறு நீக்கப்படும் என்று அமைச்சர் விளக்கம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை