நாட்டில் வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 49 பிரபலங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினர். அதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளிக்கவில்லை. ஆனால், மோடிக்கு ஆதரவான 62 பிரபலங்கள், அந்த 49 பேருக்கு எதிராக பதில் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சினிமா தயாரிப்பாளர்கள் ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப், பாடகர் சுபா முத்கல், தென்னிந்திய சினிமா பிரபலங்கள் மணிரத்னம், ரேவதி, வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா உள்ளிட்ட 49 பிரபலங்கள் கையெழுத்திட்டு பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் அவர்கள், ‘‘நாட்டில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. 2016ம் ஆண்டில் மட்டும் தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் 840 நடந்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 254 மதரீதியான தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 579 பேர் காயமுற்றிருக்கிறார்கள். குறிப்பாக, ஜெய்ஸ்ரீராம் என்ற போர் முழக்கம் போல் முழங்கி, தாக்குதல்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, பிரதமர் மோடி வெறும் வார்த்தைகளால் கண்டித்தால் மட்டும் போதாது. இந்த குற்றங்கள் தொடராமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
இதற்கு, ‘‘உங்கள் உணர்வை புரிந்து கொள்கிறோம். நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்தோ, மத்திய அரசிடம் இருந்தோ பதில் வரவில்லை. அதற்கு பதிலாக, கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது குற்்றம்சாட்டி மோடிக்கு ஆதரவான 62 கலைஞர்கள் பதில் கடிதம் ஒன்றை பிரதமருக்கு எழுதியுள்ளனர். அதில், பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரானவத், சினிமா தயாரிப்பாளர் விவேக் அக்னிகோத்தாரி, பல்லவி ஜோஷி, எழுத்தாளர் பிரசூன் ஜோஷி, பாரம்பரிய நடனக் கலைஞர் சோனால் மான்சிங் உள்ளிட்ட 62 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில், “கடந்த ஜூலை 23 ஆம் தேதி பிரதமருக்கு சிலர் எழுதிய கடிதம், எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது அரசியல் உள்நோக்கத்துடன் எழுதப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியை எதிர்மறையாக சித்தரிப்பதற்காகவே எழுதப்பட்ட கடிதமாக அதை பார்க்கிறோம். ஏற்கனவே மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், அப்பாவி மக்களை தாக்கிய போதும், கடைநிலை மனிதர்களைத் தாக்கியபோதும் அந்த 49 பேரும் ஏன் அமைதியாக இருந்தனர்? காஷ்மீரில் தீவிரவாதிகள் பள்ளிகளை கொளுத்தும்போது அவர்கள் அமைதியாக இருந்தனர்.
மேலும், ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும் பக்தர்கள் அனைவருமே குற்றவாளிகளாவும், கொலைகாரர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். அந்த பக்தர்கள் மீது அளிக்கப்படும் புகார்கள் அவர்கள் மீது தவறான தோற்றத்தை உண்டாக்குகின்றன’’ என்று கூறியிருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ள அவர்கள், அதுபோன்ற வன்முறைகளை ஜெய் ஸ்ரீராம் பக்தர்கள் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் டாப்ஸி கிடு கிடு வளர்ச்சி; கடுப்பில் கங்கனா குடும்பம்!