இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா 'பயோபிக்'கில் ஜெயலலிதவாக நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பெண் ஆளுமையாக திகழ்ந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த பட்டியலில் தற்போது இயக்குநர் பாரதிராஜா, விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர்.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதாவின் பயோபிக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. படத்துக்கு 'தலைவி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக பணிபுரிகிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தை விப்ரி மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உள்ள முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. முதலில் ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் மற்றும் கங்கனா ரணாவத் ஆகிய மூவரில் ஒருவர் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாவார் என்று தகவல்கள் வெளியாகின.
அதன் பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும் தலைவி படத்தில் நடிக்க நடிகை கங்கனாவிற்கு ரூ 24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியளித்தன. அப்படி பார்த்தால் இந்தியாவிலேயே ஒரு படத்திற்கு அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோயின் இவராகதான் இருப்பார். ஆனால் இந்த செய்தியை இயக்குநர் விஜய் மறுத்துவிட்டார். இது பொய்யான தகவல் என்றுக் கூறிவிட்டார்.
இந்நிலையில் தற்போது தலைவி படத்தின் தயாரிப்பாளர் இந்த சம்பலம் பற்றிய செய்திக்கு பதிலளித்துள்ளார். ``கங்கனாவுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்போகிறோம் என்பதைப் வெளியே சொல்ல முடியாது. ஆனால் எவ்வளவு பெரிய தொகை என்றாலும் அதற்கு கங்கனா தகுதியுடையவர்தான்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.