மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் கன மழை கொட்டி வருகிறது. வெள்ளத்தின் மும்பை தத்தளிக்கிறது. மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் நடுவழியில் சிக்கிக் கொண்டது. சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், ரயிலில் இருந்த 2000-த்திற்கும் மேற்பட்ட பயணிகள் பல மணி நேரமாக உணவு, தண்ணீர் இன்றி தவிக்க, பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இரு வாரங்களுக்கு முன் கொட்டித்தீர்த்த கனமழையால் மும்பை நகரில் சில நாட்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வெள்ளக்காடாக காட்சியளித்ததால் சாலை, ரயில், விமானப் போக்குவரத்தும் அடியோடு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த மழை தற்போது மீண்டும் மகாராஷ்டிரா மிரட்டத் தொடங்கியுள்ளது.நேற்று மாலை முதலே மும்பை மட்டுமின்றி மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் மும்பை மீண்டும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. போக்குவரத்து முடங்கி இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மும்பை மட்டுமின்றி ராய்காட், ரத்னகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் முடங்கி கிடக்கின்றனர்.
இந்த நிலையில் மும்பையில் இருந்து கோலாப்பூர் செல்லும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் மும்பைக்கு 100 கி.மீ.தொலைவில் தண்டவாளத்தில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் ரயிலில் பயணித்த 2000-த்திற்கும் மேற்பட்ட பயணிகள் அதிகாலை 3 மணி முதல் பல மணி நேரமாக தவித்து வருகின்றனர். குடிநீர், உணவு இன்றி பரிதவித்துக் கிடக்கும் பயணிகள், செல்போன் மூலம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து, உதவி கோரி வருகின்றனர்.
கன மழையும் கொட்டி வரும் நிலையில் பயணிகளை மீட்க தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், வெள்ளத்தில் ரயில் சிக்கியுள்ள பகுதிக்கு விரைந்துள்ளனர். முதலில், ரயில் பயணிகளுக்கு உணவு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. பயணிகளை படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனமழையால் நிரம்பும் கர்நாடக அணைகள்; காவிரியில் 8,300 க.அடி நீர் திறப்பு