மும்பையில் 4-வது நாளாக கனமழை கொட்டித் தீர்ப்பதால், ரயில், விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போய், மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டித்தீர்க்கிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பை நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது
இதனால் மும்பையில் சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் ரயில், சாலைப் போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டது. தொலை தூர ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை விமான நிலைய ஓடுபாதைகளும் தண்ணீரில் மூழ்கியதால் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை வரவேண்டிய பல விமானங்கள் வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.கனமழை இன்றும் நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. போக்குவரத்தும் முடங்கியதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.பல்வேறு தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துள்ளன.
மும்பையில் கனமழையால் சுவர் இடிந்து விபத்து ஆனதில் 13 பேர் பலியாகினர்.புனே நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன் அடுக்கு மாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்ததில் 19 பேர் இறந்த நிலையில், இன்றும் ஒரு இடத்தில் சுவர் இடிந்ததில் 9 பேர் இறந்துள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 60-ஐத் தாண்டியுள்ளது.