காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார்.
ஐதராபாத்தில் வசித்து வந்த 77 வயதான் ஜெய்பால் ரெட்டி, நிமோனியா காயச்சல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. ஜெய்பால் ரெட்டிக்கு மனைவியும், இரட்டையர்களான மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
1942-ம் ஆண்டு பிறந்த ஜெய்பால் ரெட்டி, உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்த போதே அரசியலிலும் நுழைந்தார்.1970-ம் ஆண்டில் இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வானார்.தொடர்ந்து 4 முறை ஆந்திராவில் எம்எல்ஏவாக இருந்த ஜெய்பால் ரெட்டி, தேசிய அரசியலிலும் காலடி வைத்து காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கினார். 5 முறை மக்களவைக்கும், 2 முறை மாநிலங்களவைக்கும் எம்.பி.யாக தேர்வு பெற்ற ஜெய்பால் ரெட்டி, 1997-ல் குஜ்ரால் பிரதமராக இருந்த போது தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார்.
பின்னர் 2004 முதல் 2014 வரையிலான பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், பெட்ரோலியம், ஊரக மேம்பாடு, கலாச்சாரம் போன்ற பல்வேறு துறைகளின் அமைச்சர் பொறுப்பை வகித்தார். சிறந்த பார்லிமென்டேரியன் என்ற பேர் பெற்றிருந்த ஜெய்பால் ரெட்டி, உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து சமீப காலமாக ஒதுங்கி இருந்தார்.
ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு காங்கிரஸ் கட்சி அனுதாபம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக் கட்சியின் டிவிட்டர் பதிவில், ஜெய்பால் ரெட்டியின் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் செயல் தலைவர் கே.டி.ரங்கா ராவ் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.