கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்ற நிலையில், நிதி மசோதாவை நிறைவேற்றிய அடுத்த நிமிடமே தமது பதவியை ராஜினாமா செய்வதாக ரமேஷ்குமார் அதிரடியாக அறிவித்தார்.
கர்நாடகா அரசியலில் ஏறத்தாழ 20 நாட்களுக்கும் மேலாக குழப்பம் மேல் குழப்பம் நீடித்து வந்தது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள அதிருப்தி எம்எல்ஏக்களால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. தற்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து, எடியூரப்பா அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நிதி மசோதாவும் ஏகமனதாக நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களும் ஆதரவளித்தனர்.
இதைத் தொடர்ந்து சபாநாயகர் ரமேஷ்குமார், தாம் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். துணை சபாநாயகரை இருக்கைக்கு அழைத்த ரமேஷ்குமார், தாம் தயாராக வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டு, சபையில் இருந்த எம்எல்ஏக்களை பார்த்து பெரிய கும்பிடு போட்டுவிட்டு, விறுவிறுவென வெளியேறினார். இதன் பின் இருக்கையில் அமர்ந்த துணை சபாநாயகர் சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதனால் புதிய சபாநாயகர் தேர்வு நாளையே நடைபெறும் என்று தெரிகிறது. பாஜகவைச் சேர்ந்த போப்பையா புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடந்த அரசியல் குழப்பத்தில், சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் எடுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு, குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மாநில ஆளுநர் விதித்த கெடு என எதற்கும் சபாநாயகர் பணிந்து போகவில்லை. அரசியல் சாசனச் சட்டத்தில் தனக்குள்ள அதிகாரங்களை சுட்டிக்காட்டி, கடைசியில் அதனை நிரூபித்தும் காட்டி விட்டார்.
கட்சி மாறும் எம்எல்ஏக்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என, 17 பேரின் பதவியைப் பறித்ததுடன், அவர்கள் தேர்தலிலும் நிற்க முடியாத அளவுக்கு கொடுத்த தண்டனை நாடு முழுவதுமே பெரும் பாராட்டை பெற்றுள்ளது என்றே கூறலாம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரானாலும், தான் சார்ந்த கட்சியின் ஆட்சி பறிபோகும் போது கூட, ஓரளவுக்கு நடுநிலையுடன் அவர் செயல்பட்டார் என்றே கூறலாம். சபாநாயகரின் அதிகாரத்தை நிலைநாட்டுவேன் என்று கூறி, பணம், பதவிக்காக அல்லாடும் அரசியல்வாதிகளை மனிதர்களே அல்ல என்று அவர் முன் வைத்த விமர்சனமும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, ரமேஷ்குமாரை சபாநாயகர் பதவியில் நீடிக்க விடப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த சங்கதி தான். இதனால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்ற அடுத்த நிமிடமே, சபாநாயகர் ரமேஷ்குமார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் சபாநாயகராக தேர்வான ரமேஷ்குமார், 14 மாதங்கள் மற்றும் 4 நாட்கள் அப் பொறுப்பில் இருந்துள்ளார்.