காஷ்மீர் பிரச்னை எதிரொலி தமிழகம் முழுவதும் உஷார் 5 ஏடிஜிபி தலைமையில் கண்காணிப்பு

by எஸ். எம். கணபதி, Aug 6, 2019, 09:23 AM IST

காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் ஒழுங்கை கண்காணிக்க 5 ஏடிஜிபிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் சட்டப்பிரிவு 370 ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானமும் நிறைவேறியது. மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.

இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் காஷ்மீர் மசோதாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிக்க காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாநிலத்தின் ஐந்து மண்டலங்களுக்கும் தலா ஒரு ஏடிஜிபியை கண்காணி்ப்பு அதிகாரியாக நியமித்துள்ளார். இதன்படி, மேற்கு மண்டலம், கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகருக்கு ஆயுதப்படை ஏடிஜிபி சங்கர் ஜிவால், மதுரை மாநகர் மற்றும் மதுரை, திண்டுக்கல் ராமநாதபுரம் சரகங்களுக்கு சிலைகடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங், மத்திய மண்டலம் மற்றும் திருச்சி மாநகருக்கு ஏடிஜிபி சைலேஷ்குமார் யாதவ், வடக்கு மண்டலத்திற்கு ஏடிஜிபி தாமரைச் செல்வன், திருநெல்வேலி மற்றும் நெல்லை சரகத்திற்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரிவு 370 நீக்கம் எதிரொலி; காஷ்மீரில் ஊரடங்கு அமல்; ஸ்ரீநகரில் ராணுவம் குவிப்பு


Leave a reply