காஷ்மீர் பிரச்னை குறித்து விவாதிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடுகிறது

by எஸ். எம். கணபதி, Aug 6, 2019, 09:43 AM IST

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை நீக்கியதற்கு இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்னையை ஐ.நா.வுக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவை நீக்கி மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்முகாஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இதற்கான மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நேற்று(ஆக.5) நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, இஸ்லாமாபாத்தில், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியாவை, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் சோஹாலி முகமது அழைத்து பேசினார். இந்தியாவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றும் ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானங்களுக்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவித்ததாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக காஷ்மீர் குறித்த இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ‘‘இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை’’ என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் அவசர கூட்டுக்கூட்டத்துக்கு அதிபர் ஆரிப் ஆல்வி நேற்று அழைப்பு விடுத்தார். அதன்படி இந்த கூட்டம் இன்று (ஆக.6) நடக்கிறது.

தெற்கு சூடான், கொசாவோ போல் காஷ்மீரை அழிக்கப் பார்ப்பதா? வைகோ ஆவேசம்


Leave a reply