கொள்ளையரை விரட்டியடித்த வீர தம்பதிக்கு அதீத துணிச்சல் விருது சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கினார்

Tirunelveli old couple who fought against robbers gets TN CMs special award in independence day celebrations

by Nagaraj, Aug 15, 2019, 13:01 PM IST

அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையர்களை, வயதான காலத்திலும் துணிச்சலாக விரட்டியடித்த நெல்லை கடையத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார்.

நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல் -செந்தாமரை தம்பதி. ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள தோட்டத்து பண்ணை வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த 11-ந் தேதி இரவு முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள், சண்முகவேலின் கழுத்தில் துண்டை இறுக்கி கொல்ல முயன்றனர். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த அவர் மனைவி செந்தாமரை கொள்ளையர்கள் மீது செருப்புகளை வீசி நிலைகுலையச் செய்தார்.

பின்னர் சண்முகவேலுவும், செந்தாமரையும் சேர்ந்து துணிச்சலாக செருப்பு 1 நாற்காலிகள், ஸ்டூல், கட்டை என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்கள் மீது வீசி தாக்கினார்கள். இத்தம்பதியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், கொள்ளையர்கள் தப்பி ஓடினர். தப்பி ஓடும் போது செந்தாமரையின் கையில் அரிவாளால் வெட்டி விட்டு அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

கொள்ளையர்களுடன் சண்முகவேல் - செந்தாமரை தம்பதி வீராவேசம் காட்டிய காட்சிகள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி இத்தம்பதிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தது. அமிதாப் பச்சன் முதல் பிரபலங்கள் பலரும் கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி. அருண் சக்திகுமார், சண்முகவேல்-செந்தாமரை தம்பதியினரை நேரில் சந்தித்து அவர்களுடைய துணிச்சலை பாராட்டினார்.

இந்நிலையில் தான், இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில், கையில் கிடைப்பதை வைத்து துணிச்சலுடன் செயல்பட மற்றவர்களுக்கு இந்த தம்பதி தூண்டுதலாக இருந்ததால், அவர்களை அரசு கவுரவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்தது. இதையடுத்து அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கலாம் என தமிழக அரசுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் பரிந்துரை செய்ய, அரசுத் தரப்பிலும் உடனடியாக சம்மதம் கிடைத்தது.

சண்முகவேல்-செந்தாமரை தம்பதியின் துணிச்சலைப் பாராட்டி சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்க தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதனால் அவசரமாக இருவரும் விமானத்தில் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது, சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு, அதீத துணிச்சலுக்கான முதல்வரின் சிறப்பு விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார். அப்போது விழாவில் திரண்டிருந்த அத்தனை பேரும் வீர தம்பதியருக்கு கை தட்டி ஆரவாரம் செய்து வாழ்த்து தெரிவித்தனர்.

அரிவாளுடன் வந்த கொள்ளையரை செருப்பு .. சேர்.. கட்டைகளால் விரட்டியடித்த வீரத் தம்பதி .. குவியும் பாராட்டுகள்

You'r reading கொள்ளையரை விரட்டியடித்த வீர தம்பதிக்கு அதீத துணிச்சல் விருது சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கினார் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை