வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

by Nagaraj, Aug 16, 2019, 10:39 AM IST

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்து ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த ஆண்டு இதே நாளில் 94 வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார். இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்ட வாஜ்பாய் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து மறைந்தார்.

1957 முதல் தொடர்ந்து மக்களவை எம்.பி.யாக 13 தடவை தேர்வு செய்யப்பட்ட வாஜ்பாய் சிறந்த பார்லிமென்டேரியன் என புகழ் பெற்றார். பாஜகவை தோற்றுவித்த முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த வாஜ்பாய் அக்கட்சியின் தலைவராகவும் இருந்தார். 1996-ல் 13 நாட்கள், 1998-ல் 13 மாதங்கள், 1999 முதல் 2004 வரை 5 ஆண்டுகள் என மூன்று முறை நாட்டின் பிரதமராகவும் இருந்தவர் வாஜ்பாய்.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2009-ம் ஆண்டு பொது வாழ்க்கையிலிருந்து வாஜ்பாய் ஓய்வு பெற்றார். வயது மூப்பினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்ட வாஜ்பாய் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ந் தேதி வாஜ்பாய் காலமானார்.

இன்று வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா மற்றும் பாஜக தலைவர்கள் என பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பாஜகவை காஷ்மீரில் கால் பதிக்கவிட்டது யார்? உமர்-மெகபூபா இடையே நீயா? நானா? மோதலால் பரபரப்பு


Leave a reply