ஆந்திராவில் குடிபோதையில் சிக்கியவர்களை மீட்பதற்கான போதை மீட்பு மையங்கள் அமைப்பதற்கும், மதுவிலக்கு பிரச்சாரங்களுக்குமாக ரூ.500 கோடியை ஜெகன்மோகன் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றார். அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில், மாநிலத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, ஜெகன் ஆட்சிக்கு வந்தும் அதிகாரிகளை அழைத்து, போலி மதுபானக் கடைகள், லைசென்ஸ் பெறாத மதுபானக் கடைகளை உடனடியாக கண்டறிந்து மூடுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, லைசென்ஸ் பெறாத, கள்ளமதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், மதுபானக் கடைகளின் எண்ணிக்கை 4,380ல் இருந்து 3500 ஆகக் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனமே சில்லரை மதுபானக் கடைகளை நடத்துவதால், அரசுக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைப்பதைப் பார்த்து, ஆந்திர அரசும் அந்த வழியை பின்பற்றுகிறது. கடந்த வாரம் இதற்காக அம்மாநில சட்டசபையில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, ஆந்திர மாநில மதுபானக் கழகம் என்ற அரசு நிறுவனமே மாநிலம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளை எடுத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஆந்திர அரசும், தமிழகத்தைப் போல் மதுபான விற்பனையில் ஈடுபடப் போகிறது.
இருந்தாலும், தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தவும் ஜெகன் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் மாநிலம் முழுவதும் போதை மீட்பு மையங்கள் அமைத்து குடிபோதை ஆசாமிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும், மதுவிலக்கு பிரச்சாரங்களும் தீவிரமாக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், போதையால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கவும் கல்வித் துறைக்கு ஜெகன் மோகன் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
அமலாக்கத்துறையின் அடுத்த குறி கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் அவசர, அவசரமாக சம்மன்