மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பபை இன்று பகல் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே நாங்குனேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எனவே, எம்.பி.யானதும் தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதே போல், கடந்த ஜூனில் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி திடீர் மரணம் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளும் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த இரு தொகுதிகளுக்கும் டிசம்பர் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போது, மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலம் வரும் நவம்பரில் முடிவடைகின்றன. எனவே, இந்த 2 மாநிலங்களிலும் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் கால அட்டவணைகளை அறிவிப்பதற்காக இன்று பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, செய்தியாளர்களை சந்திக்கிறார். தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில், நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.