கொரோனா நிபந்தனைகளை மீறி ஆட்களை திரட்டி எதிர்க்கட்சிகள் நடத்திவரும் போராட்டங்களால் தான் கேரளாவில் கொரோனா அதிகரிக்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் பின்னர் சுகாதாரத் துறையின் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோய் மேலும் பரவாமல் சில மாதங்கள் கட்டுக்குள் இருந்தது. பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கேரளாவில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை நூறுக்குள் தான் இருந்தது. ஆனால் ஜூன் மாதத்திற்குப் பின்னர் நோயாளிகள் எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த வாரம் முதன்முதலாக நோயாளிகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. நேற்று இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்தையும், இன்று 6 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டிவிட்டது. இன்று ஒரே நாளில் 21 பேர் மரணமடைந்தனர். இதையடுத்து மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 600ஐ தாண்டிவிட்டது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இன்று கூறியது: கேரளாவில் கடந்த சில நாட்களாக காங்கிரஸ், பாஜக உள்பட எதிர்க்கட்சியினர் எந்த கொரோனா நிபந்தனைகளையும் பின்பற்றாமல் ஆட்களை திரட்டி போராட்டம் நடத்தியது தான் கொரோனா பரவ முக்கிய காரணமாகும்.
எதிர்க் கட்சியினர் நோயை பரப்பும் திட்டத்துடன் தான் இது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களால் பொது மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. போராட்டக்காரர்கள் மூலம் போலீசாருக்கும் நோய் பரவியுள்ளது. காங்கிரஸ் மாணவர் சங்க தலைவரான அபிஜித் கொரோனா பரிசோதனைக்காக தனது பெயர் மற்றும் முகவரியை மாற்றி கொடுத்துள்ளார். இதனால் ஆள்மாறாட்டம் நடத்தியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டமிட்டு கொரோனாவை பரப்ப முயற்சித்தது நிரூபணமாகி உள்ளது என்று கூறினார். கேரளாவில் கொரோனா பரவ எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் கொரோனா அதிகரிக்க எதிர்க்கட்சிகள் தான் காரணம் பினராயி விஜயன் அதிரடி
Advertisement