நோயெதிர்ப்பு அதிகரிக்கும்..கரும்புள்ளிகள் அகலும்..பேன் தொல்லை போக்கும் - வேப்பிலையின் மருத்துவபலன்கள்

Health Benefits of Neem Leaf

by SAM ASIR, Sep 24, 2020, 20:38 PM IST

நம் கண்ணில் தினமும் படும் மரங்களுள் வேப்ப மரமும் ஒன்று. பல இடங்களில் வேப்ப மரங்கள் இருக்கும். அவற்றை நாம் ஏதோ ஒரு மரம் என்று நினைப்போம். ஆனால், கைக்கெட்டும் உயரத்தில் இருக்கும் வேம்பின் இலைகள் சிறந்த மருத்துவ குணம் கொண்டவை.

வேப்ப இலைகள்

பூச்சி கடித்த இடம் மற்றும் காயத்தில் வேப்பிலைகளை அரைத்து சில முறை பூசி வந்தால் அவை குணமாகும்.

வேப்பிலைகளை நீரிலிட்டு, தண்ணீர் பச்சை நிறமாக மாறும்வரைக்கும் கொதிக்கவிட வேண்டும். பின்னர் அதை குளிரவிடவும். தலைமுடியில் ஷாம்பூ போட்டு குளித்தபிறகு வேப்பிலை தண்ணீரால் கூந்தலை கழுவலாம். அப்பொழுது பொடுகு தொந்தரவு நீங்கும்.

வேப்பிலைகளை நீரில் கொதிக்கவிட்டு, பிறகு ஆற வைத்து அந்த தண்ணீரைக் கொண்டு கண்களை கழுவினால் கண் உறுத்தல், அயர்ச்சி நீங்கும். சிலருக்கு கண் சிவந்திருக்கும். வேப்பிலை நீரால் கழுவினால் சிவப்பு நிறம் மாறும்.

வேப்பிலையை மை போல அரைத்து பருக்கள் மீது பூசினால் அவை காய்ந்துவிடும். தோலில் உள்ள கறும்புள்ளிகள் மீது பூசி வந்தால் அவை அகலும். குடற்புண்களையும் வேப்பிலை ஆற்றும்.

வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து பசை போல அரைத்து சரும பாதிப்பு உள்ள இடத்தில் பூசினால் பாதிப்பு குணமாகும்.

காதுகளில் கொப்புளங்கள் வந்தால் வேப்பிலை சாற்றுடன் சிறிது தேன் கலந்து பூசினால் குணமாகும்.

வேப்பிலையை ஒரு தம்ளர் நீரில் அரைத்து குடித்தால் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

வேப்பங்குச்சி

கிராமங்களில் வேப்பங்குச்சியை மென்று அதைக் கொண்டு பல்துலக்குவதை காண முடியும். வேப்பங்குச்சியை கொண்டு பல் துலக்கும்போது உமிழ்நீரில் அல்கலைன் அளவு அதிகமாகிறது. கிருமிகள், நுண்ணுயிரிகளை எதிர்த்து இது செயல்படுகிறது. ஈறு வீக்கத்தை போக்குகிறது. பற்களை வெண்மையாக்குகிறது. பற்களில் காறை உருவாகிறதை வேப்பங்குச்சியால் பல் துலக்குவதன் மூலம் தவிர்க்கலாம்.

வேப்ப எண்ணெய்

வேப்ப விதையென்னும் வேப்பங்கொட்டையிலிருந்து வேப்ப எண்ணெய் எடுக்கப்படுகிறது.

உடலில் புழு அல்லது பூச்சி அல்லது கொசு கடித்து பாதிப்பு ஏற்பட்டால் கடிவாயில் வேப்ப எண்ணெய் பூசலாம்.

பூச்சிகளை விரட்டுவதற்கு வேப்ப எண்ணெய் உதவும்.

தலையில் பொடுகு, பேன் தொந்தரவினை போக்குவதற்கு வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம். ஒரு பங்கு வேப்ப எண்ணெயுடன் பத்து பங்கு தேங்காயெண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை மறையும்.

இரண்டு அல்லது மூன்று துளி வேப்ப எண்ணெயுடன் தண்ணீர் கலந்து அதை மருக்கள் மீது பூசி வந்தால் தோலில் உள்ள மருக்கள் மறைந்துவிடும்.

பல ஆயுர்வேத மருந்துகளும், அழகூட்டும் பூச்சுகளும் வேப்ப எண்ணெயை கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

கொதிக்கும் நீரில் சிறிதளவு இஞ்சி, துளசி இலைகள் மற்றும் மிளகு சேர்த்து உடன் சில துளிகள் வேப்ப எண்ணெய் சேர்த்து பருகினால் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் கிடைக்கும்.

You'r reading நோயெதிர்ப்பு அதிகரிக்கும்..கரும்புள்ளிகள் அகலும்..பேன் தொல்லை போக்கும் - வேப்பிலையின் மருத்துவபலன்கள் Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை