Sunday, Mar 7, 2021

அதிமுகவுக்கு எதிராக சுனாமி போல் வீசும் மக்கள் எதிர்ப்பலை.. மு.க.ஸ்டாலின் பேட்டி

by எஸ். எம். கணபதி Jan 19, 2021, 09:40 AM IST

வரும் தேர்தலில் அதிமுக அரசு மீதான மக்கள் எதிர்ப்பலை சுனாமி போல் வீசும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தி இந்து நாளிதழுக்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி வருமாறு:சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எப்படிச் சொன்னீர்கள்? நான் ஏற்கனவே 200 என்று சொல்லியிருந்தேன். ஆனால், 234 தொகுதியிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நான் நடத்திய மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு இருந்த வெறுப்பை நான் கண்கூடாகப் பார்த்தேன்.

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கூட அரசு முறையாகக் கவனிக்கவில்லை. முதலமைச்சரும், அமைச்சர்களும் கோடிக்கணக்கில் ஊழல் புரிந்துள்ளனர். அமைச்சர்களின் பினாமிகளும், உறவினர்களும்தான் சொத்துக்களைக் குவித்து வளமாக உள்ளனர். மாநிலத்தை 50 ஆண்டு பின்னுக்குத் தள்ளி விட்டனர். கொங்கு மண்டலம் எப்போதுமே அதிமுகவின் கோட்டை என்று சொல்கிறார்கள். அங்கே எப்படி வெற்றி பெறுவீர்கள்? அதிமுகவின் கோட்டை என்பதை எல்லாம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே தகர்த்து விட்டோம். ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் அதிமுகவை விட லட்சக்கணக்கான வாக்குகளை திமுக கூடுதலாகப் பெற்றிருக்கிறது.

கோவையில் ஆயிரக்கணக்கில் சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகராட்சியைச் சீர்குலைத்து விட்டார். பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் மக்களுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க நிபந்தனை விதித்து நீங்கள் தயங்குவதாக முதலமைச்சர் கூறியிருக்கிறாரே?முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல்களை நாங்கள் கவர்னரிடம் மனுவாக அளித்திருக்கிறோம். வழக்கமாக நான் எது சொன்னாலும் என் மீது அவதூறு வழக்குத் தொடுப்பார்கள். ஏன் இப்போது வழக்கு தொடுக்கவில்லை? டெண்டர்களில் உலக வங்கி விதிமுறைகளை மீறியிருக்கிறார்கள். முதலமைச்சரின் சம்பந்திக்கு விதிமுறைகளை மீறி கோடிக்கணக்கில் டெண்டர் கொடுத்துள்ளார்கள். அதை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் அதற்குத் தடை விதித்திருக்கிறதே தவிர, வழக்கை ரத்து செய்யவில்லை.

ஊழல் புகார்கள் மீது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடுக்க கவர்னரிடம் அனுமதி கோரியுள்ளோம். அதைக் கொடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சர் வைத்துக் கொண்டு, தடுத்து வருகிறார். அதனால்தான், அதைக் கொடுத்து விட்டு விவாதத்திற்கு வருமாறு கூறினேன். நான் விவாதம் செய்ய எப்போதும் தயார்தான்! அதிமுக அரசு மீது மக்களிடம் பெரிய அதிருப்தி எதுவும் இல்லை என்கிறார்களே?
அது பொய் பிரச்சாரம். 1996ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக எப்படி அலை வீசியதோ அதை விட அதிகமான எதிர்ப்பு இப்போது இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக இந்த தேர்தலில் சுனாமி போல் மக்கள் எதிர்ப்பலை வீசும். கொரோனா சமயத்தில் தப்புத்தப்பாக முடிவெடுத்தது, கோயம்பேடு, டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்டது போன்ற பல தவறுகளை நாட்டிலேயே இந்த முதல்வர்தான் செய்திருக்கிறார். ஆனால், நாங்கள் கொரோனா காலத்தில் ஒரு கோடி மக்களுக்குச் சரியான திட்டம் வகுத்து உதவி புரிந்துள்ளோம்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading அதிமுகவுக்கு எதிராக சுனாமி போல் வீசும் மக்கள் எதிர்ப்பலை.. மு.க.ஸ்டாலின் பேட்டி Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Politics News

அண்மைய செய்திகள்