கோவிட்19 நோய்த் தொற்று பரவல் காரணமாக இங்கிலாந்து, பிரேசில் உள்பட 26 நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருந்த பயணத் தடையை ஜன.26 முதல் நீக்குவதற்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.சீனாவில் தோன்றிய கோவிட்19 எனும் கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளுக்குப் பரவியது. உலகிலேயே அமெரிக்காவில்தான் மிக அதிகமானோருக்கு நோய் பாதித்தது. இது வரை அங்கு 2 கோடியே 40 லட்சம் பேருக்குத் தொற்று பரவியதில், 3 லட்சத்து 98 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு நாடுகளுக்குப் பயணத் தடை உத்தரவை அமெரிக்கா பிறப்பித்திருந்தது.
கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜன.20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப் ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதில் இங்கிலாந்து, பிரேசில், அயர்லாந்து உள்பட 26 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை ஜன.26ம் தேதி முதல் நீக்கப்படுவதாகக் கூறியுள்ளார். தற்போதைய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, அந்நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.