Wednesday, Apr 14, 2021

பட உரிமை தா, அல்லது நானே ஹீரோவாக நடிக்கிறேன்... தயாரிப்பாளருக்கு செக் வைத்த பிரபல நடிகர்..

by Chandru Jan 19, 2021, 09:58 AM IST

பட உரிமை தாங்க, இல்லா விட்டால் உங்கள் தயாரிப்பில் நானே நடிக்கிறேன் என்று செல்லமாகப் பேசி தயாரிப்பாளரிடம் படவாய்ப்பு பெற்ற ஹீரோ நடித்துள்ள படம் கபடதாரி.கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்டிரிப்யூட் டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் தயாரிக்கும் படம் கபடதாரி. இதில் சிபி சத்ய ராஜ், நந்திதா சுவேதா, நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ். கே.சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார். சைமன் கே.கிங் இசை அமைத்திருக்கிறார். ராசா மதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரவீன் எடிட்டிங் செய்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் டி.சிவா கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி கூறும்போது, இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன்போல் ஒருவர் தமிழ் சினிமாவுக்கு தேவை இவர் தயாரிப்பாளராக இருந்தாலும் எல்லா வேலைகளிலும் கவனம் செலுத்தி அதைச் சரியாக நடக்கச் செய்வார். இந்த பட ஹீரோ சிபி. பெரிய ஸ்டாரின் மகனாக இருந்தாலும் ஆரம்பக் காலத்திலிருந்தே மிகவும் எளிமையானவர். இசை அமைப்பாளர் சைமன் மிகவும் அருமையானவர். அவர் இன்னும் உயரத்துக்கு வருவார். படத்தில் நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், ஜே. எஸ்.கே அனைவருக்கும் வாழ்த்துக்கள். கொரோனா காலத்தில் மக்கள் இப்போது தான் தியேட்டருக்கு வருகிறார்கள்.பெரிய படம் மாஸ்டர் ஜெயித்துவிட்டது. சிறிய படங்களும் ஜெயிக்க வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் என்றார்.

சிபி சத்யராஜ் கூறியதாவது: கொரோனா காலகட்டத்தில் அதை இந்தளவுக்குக் கட்டுப்படுத்திய அரசுக்கு நன்றி. கபடதாரி 28ம் தேதி ரிலீஸ் ஆகிறதென்றால் அதற்கு நம்பிக்கை கொடுத்தது மாஸ்டர் படத்தோட டீம், ஈஸ்வரன் படத்தோட டீம். அதற்காகத் தளபதி விஜய், நல்ல ஃபிரண்ட் சிம்புவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். டி.சிவா இங்கு பேசும்போது சொன்னதுபோல் உலக சினிமாவுக்கே மாஸ்டர் படம் கொரோனா காலகட்டத்தில் வெளியாகி உதாரணமாக அமைந்திருக்கிறதென்றால் அது சாதாரண விஷயம் அல்ல. கபடதாரி ஒரு ரீமேக் படம். ரீமேக் என்றாலும் காப்பி பேஸ்ட்டாக இல்லாமல் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கொண்டு வரும் போது என்ன செய்ய வேண்டுமோ, இன்னொரூ ஹீரோவுக்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த எல்ல மாற்றமும் இயக்குனர் செய்திருக்கிறார். அதுவும் படத்தின் தன்னை மாறாமல் செய்திருக்கிறார்.

இந்த படத்தை நான் ஒரு ஒடிடி தளத்தில் பார்த்துவிட்டு தனஞ்செயன் சாருக்கு போன் செய்து படம் ரொம்ப பிடிச்சிருக்கு பட உரிமையே வாங்கி நானே செய்கிறேன் என்றேன் . அவரிடம் உரிமை இருந்ததால், இல்லை நானேதான் தயாரிக்கப்போகி றேன் என்றார். அப்படியென்றால் பிரச்சனை இல்லை நான் நடித்துவிடுகிறேன் என்றேன். அப்போது அவர், வேறு ஹீரோவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்றார். ஆனால் நான் தான் செய்வேன் என்பது போல் தோன்றியது. அதே போல்அது எனக்குக் கிடைத்து விட்டது. தனஞ்செயன் எறும்பு போல் சுறுசுறுப்பு. சில சமயம் ஷாட் ரெடி என்று சொல்வதற்கு கூட அவரே வந்துவிடுவார். ஐயோ, சார் நீங்க வாராதீங்க நான் ஏதோ லேட்டா வரேன்னு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்பேன் . மலைமீது கார் வைத்து ஷூட்டிங் செய்து கொண்டிருந்தபோது அது திடீரென்று பிரேக் டவுன் ஆகிவிட்டது. அது ஷாட்டுக்கு நகர வேண்டும் தள்ள முடியவில்லை.

உடனே தனஞ்செயனே போய் தள்ளி வண்டியை ஸ்டார்ட் செய்ய வைத்தார். அந்தளவுக்கு ஈடுபாடான தயாரிப்பாளர். அவர் என்னை வைத்து படம் செய்தது என் மீதிருக்கும் நம்பிக்கையை எனக்கு அதிகப்படுத்தி இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியுடன் ஏற்கனவே சத்யா படம் செய்திருக்கிறேன். இசை, எடிட்டிங், உடன் நடித்தவர்கள் என எல்லாமே நன்றாக வந்திருக்கிறது என்றார்.நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், டி.சிவா, நடிகை நந்திதா சுவேதா, இசை அமைப்பாளர் சைமன், எடிட்டர் பிரவின், ஜேஎஸ்கே. ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள். பத்திரிகை தொடர்பாளர்கள் தர்மா. ரேகா வரவேற்றனர். தனஞ்செயன் நன்றி கூறினார்.

You'r reading பட உரிமை தா, அல்லது நானே ஹீரோவாக நடிக்கிறேன்... தயாரிப்பாளருக்கு செக் வைத்த பிரபல நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை