பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று தேநீர் இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 37 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும்.பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி மிக பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் வெற்றி பெற சம வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் இந்தியாவுக்கு வெற்றி பெறவே கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்தியா 328 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கியது.நேற்று ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 4 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 4 ரன்களுடனும், கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய உடனேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் கில்லும், புஜாராவும் சிறப்பாக ஆடினர். ஆனால் துரதிஷ்டவசமாக சுப்மான் கில் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய முதல் சதத்திற்கு 9 ரன்கள் மட்டுமே இருந்த நிலையில் கம்மின்சின் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பிறகு புஜாராவுடன் கேப்டன் ரகானே ஜோடி சேர்ந்தார். ரகானே அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க தொடங்கினார். ஆனால் அவர் 22 பந்துகளில் 1 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரி உட்பட 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்சின் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு புஜாராவுடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர். தேநீர் இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 37 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும். கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. இந்நிலையில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஜோடி சிறப்பாக ஆடினால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.