தமிழகத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று சு.வெங்கடேசன் எம்.பி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ``அபாயகட்டத்தை நெருங்குகிறோம். தமிழகத்தின் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி திறன் 400 மெட்ரிக் டன். ஏப்ரல் மாத மத்தியில் நமது மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் தேவை 240 மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக நமது தேவை 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. நாம் அபாயகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்." என்றவர் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவையை பட்டியலிட்டு இருக்கிறார்.
அதில், ``திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தினசரி விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் அளவு 5 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. ஆனால் தினசரி தேவையோ 7 மெட்ரிக் டன். தர்மபுரி மாவட்டத்துக்கு தினசரி ஒரு மெட்ரிக் டன் விநியோகம் இருக்கிறது ஆனால் தேவையோ தினசரி 3 மெட்ரிக் டன். நாமக்கல் மாவட்டத்துக்கு நாள்தோறும் 6 மெட் ரிக் டன் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் தேவையோ 10 மெட் ரிக் டன்னாக இருக்கிறது.
திருச்சி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் 10 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தினசரி தேவையோ 5 மெட்ரிக் டன். தேனி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள அளவு 5 மெட்ரிக் டன். ஆனால் தேவையோ ஒரு வாரத்துக்கு 15 மெட்ரிக் டன். கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த நான்கு நாட்களாக விநியோகம் எதுவும் செய்யப்படவில்லை. தேவையோ தினசரி ஒரு மெட்ரிக் டன்னாக இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆக்சிஜன் தேவையின் அளவு தினசரி கூடிக்கொண்டிருக்கிறது, பற்றாக்குறையின் அளவும் வேகமாக கூடிக்கொண்டிருக்கிறது. அரசிடம் இப்பொழுது எதிர்பார்ப்பது கூடுதல் திட்டமிடலும், விரைவான செயல்பாடும் தான்" என்று கூறியிருக்கிறார்.