தனது முக புத்தகத்தில் குரான் வசனத்தை பதிவிட்டதால் பல விமர்சனங்களை எதிர்கொண்ட யுவன்சங்கர் ராஜா வெறுப்பு பிரசாரத்தை நிறுத்துங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.
பேஸ்புக்கில் 20லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களை கொண்டிருப்பவர் யுவன்சங்கர் ராஜா. அவர் இன்று குரான் வசனம் ஒன்றை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த இந்து அடிப்படைவாதி ஒருவர், யுவன்சங்கர் ராஜா இந்த பதிவின் வாயிலாக இஸ்லாத்தை பரப்புகிறார் என பதிவிட்டார். கிருஷ்ணன் என்பவர் போட்ட கமெண்டில், ``நான் உங்களை விரும்பியதும், பின்தொடர்வதும் நீங்கள் யுவன்சங்கர் ராஜாவாக பிறந்ததால் தான். மதத்தை பரப்பும் தளம் இது இல்லை. இப்படியே தொடர்ந்தால் உங்கள் பக்கத்திலிருந்து வெளியேறிவிடுவேன்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு யுவன்சங்கர் ராஜா `வெளியேறிவிடுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மற்றொரு நபர் ``புதிய மதத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நீங்கள் இன்னும் ஏன் பழைய பெயரையே பயன்படுத்துகிறீர்கள். உங்கள் பெயரை மாற்றுங்கள்” என்று பின்னூட்டம் இட்டுள்ளார்.
இதற்கு யுவன்சங்கர் ராஜா, ``நான் உங்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு இந்தியன். நான் ஒரு தமிழன். நான் ஒரு இஸ்லாமியன். இஸ்லாமியர்கள் அரேபிய நாடுகளில் மட்டும் தான் இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை. மதமும் இனமும் வெவ்வேறானவை. தேசியமும் மதமும் வெவ்வேறானவை. இந்த அடிப்படை விஷயம் கூட உங்களுக்கு புரியவில்லை என்றால் எதுவும் புரியாது. வெறுப்பு பிரசாரத்தை நிறுத்துங்கள். உங்கள் மீது அமைதி நிலவட்டும்” என்று பதிலடி கொடுத்துள்ளார். இதை பலரும் வரவேற்று தங்கள் டைம்லைனில் ஷேர் செய்து வருகின்றனர்.