எதிர்கட்சிகளால் மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளில் முதன் முறையாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இப்போது தான் ஏற்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.
இதை ஏற்ற லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘சீக்கிரமே இந்த தீர்மானம் குறித்தான விவாத நாள் குறித்து தெரியபடுத்தப்படும்’ என்று கூறினார். இதையடுத்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனந்த் குமார், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மீது எதிர்கட்சிகளுக்கு வேண்டுமானால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், இந்த சபையில் ஒரு விஷயத்தை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாட்டின் மக்களுக்கு இந்த அரசின் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது’ என்று கூறினார்.