பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து, கடந்த 9 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
சிறையில் இருக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழக அரசின் பரிந்துரை தீர்மானத்தை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியதாக தகவல் கசிந்தது. இந்நிலையில், ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில், "7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பவில்லை."
"தமிழக அமைச்சரவையின் பரிந்துரை 14 ஆம் தேதி தான் கிடைத்தது. இந்த விவகாரம் குறித்து மிகவும் கவனத்துடன், சட்ட ரீதியிலான ஆலோசனை நடைபெற்று வருகிறது. அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.