முதலமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ கருணாஸ் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கடந்த 16ஆம் தேதி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், முதலமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் கருணாஸ் அவதூறாக பேசியது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் போலீசார், கூட்டு சதி, வன்முறையை தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் எம்.எல்.ஏ கருணாஸ் தலைமறைவாகி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாஸை தேடும் பணியில் 3 தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அதேசமயம், எம்.எல்.ஏ கருணாஸ் மீது அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் தனித்தனியாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தலைமறைவானதாக வெளியான செய்திக்கு கருணாஸ் மறுத்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தான் இருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.