நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கும் தொணியில் பேசியுள்ளார்.
ஆளுநரை விமர்சித்து கட்டுரை வெளியிட்ட விவகாரத்தில் மூத்த செய்தியாளர் நக்கீரன் கோபால் சென்னை தனிப்படை போலீசாரால் கைது செய்தனர். சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை உடல் பரிசோதணை செய்ய போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சென்னை திருவல்லிகேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நக்கீரன் கோபாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்று நேரில் சந்தித்தார்.
அதை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக அரசின் காவல் துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எச்.ராஜா எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுத்தது ஏன்? அறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டு பெண்களை தரக்குறைவாக பேசிய எச்.ராஜாவை தமிழக காவல்துறை கைது செய்யவில்லை.
நக்கீரன் கோபால் கைது சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஆளுநர் நேரம் கொடுத்தால் நக்கீரன் கோபால் விவகாரம் குறித்து பேசுவோம் எனத் தெரிவித்தார்.