சிலைகள் வைத்துக்கொள்ள தொல்லியல் துறையிடம் இருந்து பெறப்பட்ட சான்றுகளை சமர்பிக்க வேண்டும் என தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து திருடப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் மும்பைக்கு கடத்திச் செல்லப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், தீனதயாளன் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு தீனதயாளன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ரன்வீர் ஷா என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த மாதம் பல்வேறு தேதிகளில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர்.
இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட கற்சிலைகளும், உலோகச் சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த வழக்கு விசாரணைக்காக கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி ரன்வீர் ஷாவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பினர்.
இந்த வழக்கில், முன் ஜாமின் கோரி, ரன்வீர்ஷா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தீனதயாளனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனது பெயர் இடம் பெறவில்லை என்றும், அவருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனவும் ரன்வீர் ஷா தெரிவித்துள்ளார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து சிலைகளும் தொல்லியல் துறையின் சான்றிதழ் பெற்று வைத்திருப்பதாக ரன்வீர் ஷா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
உடனே சிலைகள் எப்போது வாங்கப்பட்டன, எப்போது சான்றிதழ்கள் பெறப்பட்டன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரன்வீர் ஷா தரப்பு வழக்கறிஞர், 1993 முதல் சிலைகள் வாங்கப்பட்டன எனவும், 2008ல் சான்றிதழ் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சிலைகளை தொல்லியல் துறையிடம் பதிவு செய்த சான்றிதழ்களை தாக்கல் செய்ய ரன்வீர் ஷா, கிரண் தரப்பினருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.