வரும் டிசம்பர் மாதத்திற்குள் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அறிவித்திருப்பதால் அந்தத் தொகுதிகள் காலியாக இருக்கின்றன என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
அவற்றுடன் ஏற்கனவே காலியாக உள்ள இரண்டு தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இந்த 18 தொகுதிகளும் கடந்த ஓராண்டாக பிரதிநிதி இல்லாமல், மக்கள் பணி எதுவும் செய்யப்படாமல் மோசமான நிலையில் உள்ளன. இந்நிலையில் அங்கு தேர்தலை நடத்த தாமதித்தால் அது அந்த தொகுதி மக்களை எல்லாம் வஞ்சிப்பதாகவே இருக்கும். அதுமட்டுமின்றி தேர்தல் ஜனநாயகத்தையும் சிதைப்பதாகிவிடும்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு என்ற மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது அதன் பொறுப்பாகும். ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஏற்ப தேர்தல் தேதியை அறிவிப்பது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிடும்.
எனவே, டிசம்பர் மாதத்திற்குள் இந்த 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.