விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விதவிதமான பலகாரங்கள் படைத்து வழிப்படுவது வழக்கம். இதில் முதன்மையானது விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை.
இந்த லாக்டவுன்ல நிறைய ரெசிப்பிக்கள் ட்ரை பண்ணி சமைக்க கத்துக்கிட்டு இருப்பீங்க.. முதல் முறையா கொழுக்கட்டை செய்ய ஆசைப்படுறீங்களா..? இதோ உங்களுக்காக எளிய முறையில் எள் பூராண கொழுக்கட்டை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - ஒரு கப்
கருப்பு எள் - கால் கப்
வெல்லம் - கால் கப்
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
துருவியத் தேங்காய் - 2 மேசைக் கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாத்திரத்தில் கருப்பு எள், தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி வடிகட்டி துணியில் பரப்பி உலர வைக்கவும்.
பிறகு, வானலியில் உலர்ந்த எள் சேர்த்து வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
அத்துடன் வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். வெல்லம் கரைந்து கெட்டி பதத்திற்கு வந்ததும் இறக்கவும். எள் பூராணம் தயார்.
பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, நல்லெண்ணெய், தேவையான அளவு சுடு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசையவும்.
பின், ஒரு பிடி மாவு எடுத்து உருண்டை செய்து நமக்கு விருப்பமான அச்சு வடிவங்களில் வைத்து அழுத்தவும்.
நடுவில் எள் பூரணம் வைத்து முழுமையாக மூடிவிடவும்.
இந்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் எள் பூரண கொழுக்கட்டை ரெடி!