”எதுக்குத்தான் இப்படி எண்ணெயைக் கொட்டி கத்திரிக்காயைச் சமைப்பியோ..?!” என்று தெறித்து ஓடும் அளவுக்கு பலரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது, உணவில் மிதமிஞ்சி பயன்படுத்தப்படும் எண்ணெய்!
எண்ணெய் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தியே விதம்விதமான சமையல் இருக்கத்தான் செய்தது. எள்ளு தாத்தா-எள்ளு பாட்டியிடம் (உயிரோடு இருந்தால்) கேட்டுப் பாருங்கள்… பல தலைமுறைகளாக தாங்கள் சப்புக்கொட்டி, ரசித்து, ருசித்து சாப்பிட்டு, நோய் நொடியில்லாமல் வலம் வந்த அந்த ரகசியத்தைச் சொல்வார்கள்!
அப்போதெல்லாம், பண்டிகைகளுக்கு மட்டுமே எண்ணெய் என்பது வீடுகளை எட்டிப் பார்க்கும். இன்றைக்கோ… தோசை, பூரி, வடை என்று பொழுதுவிடிந்தால்… பொழுதுபோனால், எண்ணெயோடுதான் வாழ்க்கை! விளைவு… கொலஸ்ட்ரால், பிளட் பிரஷர், சர்க்கரை என டாக்டரிடம் ஓடிக் கொண்டிருக்கிறோம். அவர் சொல்கிற முதல் வார்த்தையே “சாப்பாட்டுல எண்ணெயைக் குறைச்சுடுங்க” என்பதுதான்.
”எண்ணெய் இல்லாமல் சமைக்க முடியுமா?” என்று அலறாதீர்கள். இங்கே, பிரபல ‘சமையல் கலை நிபுணர்’ ரேவதி சண்முகம் உங்களுக்கு பரிமாறிஇருக்கும் 30 வகை சமையலுமே ‘ஆயில் ஃப்ரீ’தான்! கூடவே அவர் சொல்லும் ஓர் எச்சரிக்கைக் குறிப்பு
“இந்த வகை சமையலுக்காக தாளிக்கறப்ப, அடுப்பை மிதமான தீயில வச்சுருக்கணும். அப்பதான் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு மாதிரியான பொருட்கள் கருகாம பொரிஞ்சு வரும்.”
எண்ணெய் செலவுக்கு மட்டுமல்ல… மருத்துவச் செலவுக்கும் குட்பை சொல்வோமா?!