தேனி மாவட்டத்துக்கு மிகப்பெரிய பிரச்சனை ஓ.பன்னீர்செல்வமும் அவரது மகனும்தான் என ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் தேனி தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. வருகிற 12ம் தேதி தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இளங்கோவனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
இந்நிலையில், திமுக ஆதரவுடன் தொகுதியில் போட்டியிடும் இளங்கோவன், மதுரை பூதூரில் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பப்புசாமியை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர், பேட்டி அளித்த இளங்கோவன், ‘பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் தேர்தல் ஆணையம் ஜால்ரா போட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு ரூ.500, ரூ.1000 தந்தாள் வாங்க வேண்டாம் என ஏற்கனவே கூறியுள்ளேன். மாறாக, ஓட்டுக்காகப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களிடம் ரூ.5000, ரூ.10,000 வாங்கிக்கொண்டு, எப்படி இந்த 5 வருடக்காலம் மக்களுக்கு ‘நாமம்’ போட்டார்களோ அவ்வாறு, தேர்தலில் அவர்களுக்கு ‘நாமம்’ போடுங்கள் என மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றவர்,
தேனி தொகுதியைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அவரது மகன் ரவீந்திரநாத் குமாரும் தான். மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். ஆகவே, இந்த தேர்தலில் அவர்களைத் தோல்வி அடையச் செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதுதான், தேனி நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சிக்குச் சரியாக இருக்கும்’ என்றார்.