நான் எம்.பியானால் ஆறே மாதத்தில் ரயிலை வரவழைப்பேன் என தேனி தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு வேட்பு மனுதாக்கல் செய்தார் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். தொடர்ந்து தனது தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக தேனியிலேயே தங்கியிருக்கிறார்.
தேனியில் இவர் தங்கியிருக்கும் பகுதி எதுவென தெரியுமா? ஆம், தேனியின் போயஸ் கார்டன் வீட்டில் தான் இவர் தங்கி தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். அவர் இருக்கும் வீட்டுக்கு தேனியின் போயஸ் கார்டன் எனப் பெயர் வந்ததுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக் உள்ளது.
தேனியின் சென்டர் பகுதியான என்.ஆர்.டி நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள 22ம் நம்பர் வீடு தான் தேனியின் போயஸ் கார்டன். ஜெயலலிதா ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட போதும் சரி, தேனிக்கு வரும் போதெல்லாம் சரி அவர் தங்குவது இந்த வீட்டில் தான். ராமானுஜம் என்பவருக்குச் சொந்தமான இந்த வீட்டில் அந்தக் காலத்திலேயே ஜெயலலிதா தங்குவதற்காக ஸ்பெஷலாக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இங்கு தங்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வெற்றிபெற்றவர் 2002ல் முதல்வர் பதவியையும் தக்கவைத்துக்கொண்டார். இதனால் தான் அந்த வீட்டுக்கு இப்படி ஒரு பெயர் வந்தது.
ஜெயலலிதாவுக்கு கிடைத்த ராசி, தனக்கும் இந்த வீட்டில் தங்கினால் கிடைக்கும் என்பதால் தான் இளங்கோவனும் அந்த வீட்டை தேர்ந்தெடுத்தார் என கதர் சட்டைக்காரர்கள் கிசுகிசுக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது அவரை தரக்குறைவாக விமர்சித்த பெருமைக்குரியவர் இளங்கோவன். அவருக்கு ஜெயலலிதாவின் ராசி கைகொடுக்குமா என்றால் சந்தேகம் தான் என்கின்றனர் தேனி காங்கிரஸ் நிர்வாகிகள்.
உள்கட்சி சண்டை, பண புழக்கம் இல்லாததது, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் - தங்கத்தமிழ் செல்வன் இடையேயான `பவர் புல்' (பணம்) போட்டி ஆகியவற்றால் பிரச்சாரத்தில் இளங்கோவனின் `கை' சற்று குறைந்தே உள்ளது. களநிலவரம் இப்படி இருக்க ராசியை மட்டும் நம்பி பிரயோசனமில்லை என விவரிக்கின்றனர் `கை' கட்சியினர்.