உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.1500 -க்கும் மேற்பட்ட காளைகளை அடக்க இளம் காளையர்களும் களத்தில் இறங்கி நீயா?நானா? எனும் வகையில் வீர விளையாட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக நேற்று மாலை முதலே காளைகள் வாடிவாசல் பகுதியில் குவிந்தன. காலை 8 மணிக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தனர்.
துள்ளிக் குதித்து வீரம் காட்டிய காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளிக் காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், அண்டா,டி.வி, மொபைல் போன் என ஏராளமான பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகிறது. அடங்காது வீரம் காட்டும் சிறந்த காளைக்கும், காளைகளின் திமில் பிடித்து வீரம் காட்டும் இளம் காளையருக்கும் கார், பைக் போன்ற சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் குவிந்துள்ளனர்.