ஆய்வாளர் பெரியபாண்டியனை தான் சுடவில்லை என்று ராஜஸ்தான் காவல் துறையினரால் பிடிபட்டுள்ள, நாதுராம் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கு மற்றும் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நாதுராம், கடந்த வாரம்குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ராஜஸ் தான் மாநில எஸ்.பி தீபக் பார்கவ் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வெகு ஜாக்கிரதையாக தன் செலவிற்கு பணம் தேவைப்படும்போதும் உறவினர்களுக்கு போன் செய்யும்போதும் சாதுரியமாக பொதுமக்களிடம் இரவல் போன் வாங்கி பயன்படுத்திய நாதுராம், முகநூலை பயன்படுத்திய போது, சைபர் பிரிவினரிடம் சிக்கிக் கொண்டார்.
பிடிபட்ட நாதுராமிடம் 12 மொபைல் போன்கள், போலி முகவரியுடன் கூடிய சுமார் 50 சிம் கார்டுகள் சிக்கின. தற்போது, நாதுராமை நீதிமன்ற அனுமதியுடன் 3 நாள் காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், பெரியபாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தன்னைச் சுற்றி வளைத்தபோது துப்பாக்கிச் சூடுநடந்ததாகவும் தன்னைத்தான் சுடுகிறார்கள் என்று பயந்து ஓடிவிட்டதாகவும், பெரியபாண்டியனை தான் சுடவில்லை என்றும் போலீசாரிடம் நாதுராம் வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
நாதுராம்தான் மறைந்திருந்து போலீசாரைத் தாக்கியதாக கூறப்படுவது பற்றியோ, ஆய்வாளர் பெரியபாண்டியனை பிடித்து வைத்துக்கொண்டு சுற்றிவளைத்துத் தாக்கியதாகவோ எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, நாதுராம், தினேஷ் சவுத்ரி இருவரையும் விசாரணைக்காக சென்னை அழைத்து வர, தமிழக தனிப்படை போலீசார் ராஜஸ்தான் செல்கின்றனர்.