சாமி கும்பிட, யாகம் நடத்த உன்னுடைய அப்பன் வீட்டு கோட்டை இல்லை.... ஓபிஎஸ் மீது ஸ்டாலின் பாய்ச்சல்

மக்களுடைய வரிப்பணத்தில் கோட்டையை சாம்பி கும்பிடவோ அல்லது யாகம் நடத்தவோ எப்படி பயன்படுத்தலாம்? என துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதி ஈசநத்தம் மற்றும் சின்னதாராபுரம் ஊராட்சி சபை கூட்டங்களில் இன்று ஸ்டாலின் பேசியதாவது:

உங்களையெல்லாம் சந்தித்து உங்களுடைய பிரச்னைகளை, குறைகளை உங்களுடைய எண்ணங்களை, உணர்வுகளை தெரிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் இந்த கிராம சபைக் கூட்டத்தின் மூலமாக ஒரு நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது. அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அடங்கி இருக்கக்கூடிய ஈசநத்தம் ஊராட்சியில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பூரிப்பு அடைகின்றேன்.

எங்களுடைய அழைப்பை ஏற்று வந்திருக்கக்கூடிய உங்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியையும் அதே நேரத்தில் உங்கள் அத்தனை பேரையும் நான் வருக வருக வருக என்று வரவேற்று மகிழ்கிறேன்.

தமிழகத்தில் இதுபோன்று 12,617 ஊராட்சிகள் இருக்கின்றது. அந்த 12,617 ஊராட்சிப் பகுதிகளில் இதுபோன்ற கிராம சபைகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்தி தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய அக்கிரம ஆட்சிக்கு - அலங்கோல ஆட்சிக்கு – அநியாய ஆட்சிக்கு - சர்வாதிகார ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அதே நேரத்தில் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய பாசிச ஆட்சிக்கு - மதவாத வெறிபிடித்து இருக்கக்கூடிய ஒரு கொடுமையான மோடி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற அந்த உணர்வோடு இந்த கிராம சபைக் கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே முதற்கட்ட பயணத்தை தலைவர் கருணாநிதி பிறந்த திருவாரூர் மண்ணில் புலிவலம் ஊராட்சிப் பகுதியில் நான் துவங்கி வைத்தேன். அதைத்தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன்.

அதேபோல் திமுக முன்னோடிகள், நிர்வாகிகள், பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று ஒவ்வொரு ஊராட்சிப் பகுதிகளுக்கும் சென்று இந்தப் பணியை தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.

அந்த அடிப்படையில் தான் இந்த அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈசநத்தம் ஊராட்சியில் உங்களையெல்லாம் நான் சந்திக்க வந்து இருக்கின்றேன்.

திருவாரூர், புலிவலம் பகுதியில் கிராம சபை நிகழ்ச்சியை நான் துவங்கி வைத்து பேசுகின்றபோது குறிப்பிட்டுச் சொன்னேன். அதேதான் இங்கேயும் குறிப்பிட விரும்புகின்றேன். உங்களையெல்லாம் சந்திக்க இந்த ஈசநத்தம் ஊராட்சிக்கு வந்திருக்கிறோம் என்று சொன்னால், என்னைப் பொறுத்தவரையில் ஏதோ ஒரு கோவிலுக்கு வருவது போல் இந்த ஊருக்கு நான் வந்து இருக்கின்றேன். பக்த பெருமக்களுக்கு கோவில்கள் ஒரு புனித ஸ்தலமாக இருக்கலாம், ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு இதுபோன்ற கிராமங்கள் தான் ஒரு புனித ஸ்தலமாக கோவிலாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

இங்கிருந்து தான் அரசியல் துவங்கியிருக்கிறது, இங்கிருந்துதான் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கக்கூடிய அந்தப் பணிகளும் துவங்கி இருக்கிறது. ஒரு காலத்தில் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு எப்படிப்பட்ட முறை இருந்திருக்கிறது என்று சொன்னால் குடவோலை மூலமாக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய நிலை இருந்திருக்கிறது.

இந்த கிராம சபைக் கூட்டத்தை நடத்துவதற்கு ஒரு முழக்கத்தை நாங்கள் தேர்ந்தெடுத்து, முடிவுசெய்து அறிவித்திருக்கின்றோம். அது என்ன முழக்கம் எனக் கேட்டால், “மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்களுடைய மனங்களை வெல்வோம்” என்று அந்த நிலையில் தான் இந்த முழக்கத்தை தேர்ந்தெடுத்து இந்தப் பணியை நாங்கள் துவங்கி இருக்கின்றோம்.

ஆகவே, இந்தப் பணியின் நோக்கம், இந்த கிராம சபையின் நோக்கம் நாங்கள் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டும் என்பதைவிட நீங்கள் பேசுவதை நாங்கள் கேட்க வேண்டும் என்ற அந்த நிலையில்தான் இந்தக் கூட்டம் பயன்பட வேண்டும்.

எனவே, இன்றைக்கு ஊராட்சியில் இருக்கக்கூடிய உங்களைத் தேடி வந்திருக்கின்றோம். இந்தப் பணிகள் துவங்கி இன்றைக்கு எல்லா மாவட்டங்களிலும் நடத்த ஏறக்குறைய 15 லிருந்து 20 சதவிகித பணிகள் முடிவடைந்து இருக்கிறது. இன்னும் மிச்சம் இருக்கக்கூடிய அந்தப் பணிகளை நிறைவேற்றி முடிக்க வருகின்ற பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

ஆகவே, இன்றைக்கு உங்களைத் தேடி இந்த கிராம சபைக் கூட்டத்திற்கு வந்து இருக்கிறோம் என்று சொன்னால் இதைக்கூட இன்றைக்கு ஆளும் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் முதலமைச்சராக இருந்தாலும் சரி, அல்லது அவர்களுக்கு கீழே பணியாற்றி கொண்டிருக்கக்கூடிய அமைச்சர்களாக இருந்தாலும் சரி, கிராம சபைக் கூட்டத்தை நாங்கள் நடத்துவதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். ஒரு அச்சத்திற்கு ஆளாகி இருக்கின்றார்கள். அதனால்தான் வாய்க்கு வந்தபடியெல்லாம் அவர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள். கேட்கின்றார்கள்,

திமுக தலைவர் மு க ஸ்டாலின் கிராம சபைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். இதுவரையில் அவர் எந்த கிராமத்திற்காவது போய் இருக்கின்றாரா? ஏற்கனவே உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார், துணை முதலமைச்சராக இருந்திருக்கிறார், அப்போதெல்லாம் கிராமத்திற்குச் செல்லாதவர்கள் இப்பொழுது கிராமத்திற்கு போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்று ஒரு அப்பட்டமான பொய்யை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். நான் பலமுறை அதற்கு விளக்கம் சொல்லி இருக்கின்றேன். உங்களைப் பொறுத்தவரையில் நான் அதிகம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

முதன்முதலில் நான் அரசியலில் ஈடுபட்டு இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அந்த இளைஞர் அணி சார்பில் என்னுடைய பயணத்தை எங்கிருந்து துவங்கினேன் என்று சொன்னால் கிராமப் பகுதியிலிருந்து தான் என்னுடைய அரசியல் பயணத்தை நான் துவங்கி இருக்கின்றேன். இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால் நான் செல்லாத கிராமங்களே தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்பதே என்னுடைய கருத்து.

நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த பொழுது ஒவ்வொரு உள்ளாட்சித் தலைவரையும் நேரடியாக சந்திக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஊராட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து அவர்களுடைய குறைகளை நான் கேட்க வேண்டும் என்று முடிவு செய்து நான்கு மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஊராட்சித் தலைவர்கள் அடங்கிய உள்ளாட்சி அமைப்புகள் இருக்கக்கூடிய நிர்வாகிகள் அடங்கிய ஒரு மாநாட்டை நடத்தி காலையிலிருந்து மாலை வரை நடத்தி, அதில் அவர்களின் அனைத்துப் பிரச்னைகளையும் கேட்டு அறிந்தவன் நான். அதுமட்டுமல்ல இதுவரையில் தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் 12,617 ஊராட்சிப் பகுதிகளில் நூல் நிலையங்களை உருவாக்கித் தந்த பெருமை திமுக ஆட்சியில் தான்,

நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நேரத்தில்தான். இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், இந்த ஈசநத்தம் ஊராட்சி என்பது விருது பெற்றிருக்கக்கூடிய ஊராட்சி. அதுவும் நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நேரத்தில்தான்.

நான் கேட்கின்றேன், ஸ்டாலின் என்றைக்காவது கிராமத்திற்குப் போனதுண்டா என்று கேட்கும் எடப்பாடிக்கு, சேலத்தை தவிர எனக்கு வேறு ஏதாவது ஒரு ஊர் தெரியுமா? இன்றைக்கு நான் எங்கு போனாலும் இவன்தான் ஸ்டாலின், இவன்தான் தளபதி, இவன்தான் கலைஞரின் மகன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மக்களோடு மக்களாக இருந்திருக்கிறேன். நான் ஏதோ பெரிதாக வந்து விட்டேன் என்பதற்காக பெருமை பேசுவதகாக நினைத்துவிடக்கூடாது.

காரணம் மக்களோடு மக்களாக இருந்து மக்களோடு பழகி மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டிருக்கக்கூடிய இந்த நிலையிலே தான் நான் இதைக் கூறுகின்றேன்.

ஆகவே, இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்பது ஏதோ அரசியலுக்காக வந்திருக்கிறோம் என்று நீங்கள் கருதவேண்டிய அவசியமில்லை. உங்களுடைய சொந்தப் பிரச்னைகளுக்காக, உங்களுடைய சொந்த குறைகளுக்காக உங்கள் ஊரில் இருக்கக்கூடிய பிரச்னைகளை அறிந்து கொள்வதற்காக நடைபெறக்கூடிய கூட்டம் என்பதை தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. அந்த ஆட்சி மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களால் உருவாக்கித் தந்த ஆட்சி என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவர் மறைந்த காரணத்தால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருக்கின்றார்கள். அவருடைய பெயரை பயன்படுத்திக் கொண்டு அவர் மூலமாக ஒரு செல்வாக்கை ஏதோ பெற்றுவிட்டோம் என்கின்ற நிலையில் இன்றைக்கு அவர்கள் ஆட்சியில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் என்னென்ன தவறுகளை என்னென்ன பிரச்னைகளை இன்றைக்கு அவர்கள் சந்தித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.

அவர்களைப் பொறுத்தவரையில் வெறும் கமிஷன் - கலெக்சன் - கரெப்சன் என்ற நிலையில்தான் அவர்கள் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். மக்களைப் பற்றியோ, மக்களுடைய பிரச்னைகளைப் பற்றியோ மக்களுடைய வாட்டத்தைப் பற்றியோ உங்களுக்கு இருக்கக்கூடிய குறைபாடுகளை பற்றியோ உங்களுக்கு என்ன தேவை என்பது பற்றியோ கிஞ்சிற்றும் கவலைப்படாத இந்த நிலையில்தான் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே, இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த கிராம சபைக் கூட்டம் நிச்சயமாக பயன்பட போகின்றது.

அதிலும் விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நாம் சந்தித்த இருக்கின்றோம் நாடாளுமன்றத் தேர்தலோடு நிச்சயமாக உறுதியாக சட்டமன்றத் தேர்தலும் வருவதற்கான வாய்ப்பு இன்றைக்கு உருவாகி இருக்கின்றது. ஏனென்றால், ஓ.பி.எஸ்ஸோடு சேர்த்து 11 எம்.எல்.ஏ.,க்கள் நிலை என்ன ஆகப் போகின்றது என்ற நிலை இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. அதனால்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஓ.பி.எஸ் யாகம் ஒன்றை நடத்தி இருக்கிறார்.

அதிலிருந்து எப்படியாவது தப்பித்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் யாகத்தை நடத்தி இருக்கின்றார். யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டோம் என்று சொல்கின்றார். நீ சாமி தான் கும்பிட்டியா? இல்லை யாகம் நடத்தினாயா? என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. உன் வீட்டில் நடத்தி இருக்கலாம். கோட்டை ஒன்றும் உன்னுடைய அப்பன் வீட்டு கோட்டை இல்லை. மக்களுடைய வரிப்பணத்தில் நடைபெறக்கூடிய கோட்டை. மக்கள் இதை பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி இங்கு வந்திருக்கக்கூடிய அத்தனை பேரும் பேச வேண்டும் என்கின்ற ஆசையும் ஆவலும் நிச்சயமாக இருக்கும். அதை நான் மறுக்கவில்லை.

இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய சாலை வசதிகள், குடிநீர் பிரச்னை, சுகாதார சீர்கேடு, மருத்துவமனை பிரச்னை, போக்குவரத்து வசதி இப்படி பல பிரச்சனைகள் இருக்கிறது. எனவே அந்த பிரச்னையை அறிந்து புரிந்து அதற்கேற்ற வகையில் வரக்கூடிய தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் பெற்று, ஆட்சிப் பொறுப்பிற்கு வருகின்ற நேரத்தில் நீங்கள் சொன்ன குறைபாடுகளையெல்லாம் கலைவதற்கான முயற்சியில் நிச்சயமாக ஈடுபடுவோம் என்ற உறுதிமொழியை இந்த நேரத்தில் நான் முன்கூட்டியே உங்களிடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நீங்கள் அனைவரும் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற முடிவோடு வந்திருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. எனவே, உங்கள் அனைவரையும் வருக – வருக – வருக என்று வரவேற்று முன்னுரையை நிறைவு செய்கின்றேன்.

பின்னர் மக்கள் தங்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளை மற்றும் மத்திய மாநில அரசுகளின் நிர்வாகத் தோல்விகளை குறிப்பிட்டுப் பேசினர். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

அனைவருக்கும் என் வணக்கத்தை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தக் கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றி நான் முதலிலேயே உங்களிடத்தில் எடுத்துச் சொன்னேன். இந்தக் கூட்டம் என்ன நோக்கத்திற்காக நடக்கிறது என்று, அதை நீங்கள் நன்றாக புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் உங்களுடைய கருத்துக்களை எல்லாம் எடுத்துப் பேசி இருக்கின்றீர்கள். நேரத்தின் அருமை கருதி நீங்களும் சுருக்கமாக மொத்தம் 22 பேர் பேசி இருக்கின்றீர்கள். தண்ணீர் பிரச்னை – ரோடு பிரச்னை – தடுப்பணை பிரச்னை – ரேஷன் பிரச்னை – வேலை வாய்ப்பு பிரச்னை – விளையாட்டு மைதானப் பிரச்சனை – கல்விக் கடன் பிரச்சனை – கழிப்பிடப் பிரச்சனை – விவசாயிகள் பிரச்னை - சுகாதாரப் பிரச்சனையைப் பற்றியெலாம் குறிப்பிட்டுப் பேசினீர்கள். அதிலும் குறிப்பாக ஆளும் கட்சி எம்.பி இங்கு வந்து போஸ் காண்பித்து பிட்டு போட்டுவிட்டு போய்விடுகின்றார் என்று சொன்னீர்கள். நான் பிட்டு என்பது என்ன என்பதை நான் இங்கு வந்து தான் புரிந்துகொண்டேன்.

இளைஞர் கார்த்திகேயன் சிறப்பாக தன்னுடைய கோரிக்கைகளை எடுத்து வைத்தார். கல்விக் கடன் பற்றி ஆதங்கத்தோடு பேசினீர்கள், சென்ற தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டியிருந்தோம்.

ஆட்சிக்கு வரும் போது மாணவர்களுடைய கல்விக்கடனை ரத்து செய்வோம் என்பதை தெளிவாக போன தேர்தலில் எடுத்துச் சொன்னோம். அதனால்தான், பேசும்போது நீங்கள் வந்தால் தான் அதை செய்வீர்கள் என்று நம்பிக்கையோடு சொன்னீர்கள்.

ஒன்றை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்,

உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் இந்தளவிற்கு பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. உள்ளாட்சித் தேர்தல் மாத்திரம் முறையாக நடத்தப்பட்டிருந்தால் நாங்கள் ஊராட்சி சபைக் கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் வந்திருக்காது. அது நடத்தப்படவில்லை. நீண்ட ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்த கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது திமுகதான் அது உங்களுக்குத் தெரியும்.

திமுக ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறோம். ஆனால் இந்த ஆட்சி வந்ததற்கு பிறகு இதுவரையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. ஆனால் தேவையற்ற வகையில் ஒரு அபாண்டமான பொய்யை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு திமுகதான் காரணம் என்று. அதனை விரிவாக நான் பல இடங்களில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

குறிப்பாக, பலமுறை நீதிமன்றம் அரசை எச்சரிக்கை செய்தது. தேர்தல் கமிஷன் அழைத்து, எப்போது நடத்துவீர்கள் எப்போது நடத்துவீர்கள், ஆட்சியில் இருக்கக்கூடிய உயர்ந்த அதிகாரிகளைக் கூப்பிட்டு தேர்தலை எப்போது நடத்துவீர்கள் என்று பலமுறை தேதியை சொல்லி இதுவரையில் நடத்தினார்கள் என்று கேட்டால் இல்லை.

தேர்தலை நடத்தினால் திமுக வெற்றி பெற்று விடும். எனவே வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய்யை திரும்ப திரும்ப திமுகதான் நடத்தவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் தான் மக்களுடைய குறைகளை முழுமையாக தீர்க்க முடியும். அரசாங்கம் எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்திட முடியாது. அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பிரச்னையை தீர்க்க முடியாது. உள்ளூர் தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள் அங்கு இருக்கக்கூடிய ஊராட்சி பிரசிடன்ட் உள்ளாட்சி அமைப்பில் இருக்கக்கூடிய கவுன்சிலர்கள் மேயர்கள், இவர்கள்தான் பிரச்னைகளைத் தீர்க்க முடியும்.

எனவே அந்தப் பணியை இதுவரையில் இந்த ஆட்சி செய்யவில்லை. எனவே தான் திமுக சார்பில் உறுதி தருகின்றேன். திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த வினாடியே உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம் என்று திமு கழகத்தின் சார்பில் முடிவு செய்திருக்கிறோம். நடத்திக் காட்டுவோம் என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு சகோதரி பேசும்போது சொன்னார், நம்முடைய குறைகளை நிவர்த்தி செய்து முடிக்க வேண்டும் என்று சொன்னால் திமுக வுக்கு தான் நாம் ஆதரவு தர வேண்டும், திமுக வை வெற்றி பெற வைப்போம் என்று ஒரு சகோதரி பேசுகின்றபோது குறிப்பிட்டுச் சொன்னார். அந்த நம்பிக்கையை நான் பாராட்டுகின்றேன், மகிழ்ச்சி அடைகின்றேன். காரணம் அந்தளவிற்கு உங்கள் நம்பிக்கை இருக்கின்றது. நம்பிக்கை இருக்கின்ற காரணத்தினால் தான் இத்தனை பேர் இவ்வளவு பொறுமையாக வந்து உட்கார்ந்து இருக்கின்றீர்கள்.

நம்பிக்கை இல்லை என்றால் இவ்வளவு பேர் வந்து உட்கார மாட்டீர்கள். பெண்கள் இவ்வளவு பொறுமையாக இருக்கிறீர்கள்.

இப்பொழுது நாங்கள் நம்புவதை விட நீங்கள் தான் திமுக ஆட்சிக்கு வரப் போகிறது என்று அதிகமாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த உணர்வோடு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால் ஏற்கனவே தமிழ்நாட்டில் கருணாநிதி ஐந்து முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். ஐந்து முறை ஆட்சி நடத்தியிருக்கின்றார். ஆட்சி நடத்திய நேரத்தில் என்னென்ன சாதனைகள், என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.

நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. நான் சுருக்கமாக உங்கள் மனதில் இருப்பதை இப்பொழுது நீங்கள் பேசியதை நான் சொல்கின்றேன். கருணாநிதி இருந்தபொழுது தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தார் என்று. நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் விவசாயிகள் அனைவரும் சேர்ந்து ஒரு பெரிய போராட்டமே நடத்தினார்கள். பெரிய பெரிய போராட்டங்கள் எல்லாம் நடந்தன. மறைந்த விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. என்ன போராட்டம் என்று கேட்டீர்கள் என்றால், இலவச மின்சாரம் கேட்டு அல்ல மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சொல்லி ஒரு போராட்டம். அதுவும் ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று சொல்லி போராட்டம்.

ஆனால் அன்றைக்கு இருந்த ஆட்சி அதை ஏற்றுக்கொள்ளவில்லை செய்யவில்லை முடியாது என்று திட்டவட்டமாக சொல்லி விட்டார்கள். அதனால் பெரிய கலவரமே நடந்தது. நாராயணசாமி நாயுடு அவர்களை இதே திருச்சியில் போராட்டம் நடத்தியபோது தடியடி நடத்தி கைது செய்து மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். ஆனால் கருணாநிதி ஆட்சிக்கு வந்த உடனே சட்டமன்றத்தில் ஒரு உத்தரவு போட்டார். விவசாயப் பெருங்குடி மக்களே, அதிமுக ஆட்சியில் இருந்தபொழுது மின்சாரக் கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று சொல்லி போராடினீர்கள். ஆனால் அவர்கள் குறைக்கவில்லை. இப்பொழுது திமுக ஆட்சி. இப்பொழுது எங்கள் இடத்தில் நீங்கள் கோரிக்கை வைக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை, ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை, மறியல் செய்யவில்லை, உண்ணாவிரதம் இருக்கவில்லை, கோட்டைக்கு வந்து மனு கூட கொடுக்கவில்லை.

மின்சாரத்தை ஒரு பைசா அல்ல ஒரு பைசா கூட நீங்கள் தர வேண்டிய அவசியமில்லை இலவச மின்சாரம் கொடுக்கிறேன் என்று கருணாநிதி கூறினார். இதுதான் கருணாநிதி ஆட்சி.

அதேபோல, விவசாயக் கடன் தள்ளுபடி, ஒரு கோடி - இரண்டு கோடி அல்ல, 7,000 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். பதவியேற்ற மேடையிலேயே அதனை நிறைவேற்றிக் காட்டியவர் கருணாநிதி. அவர் தான் கருணாநிதி. அவர் சொல்வதைத் தான் செய்வார்! செய்வதைத் தான் சொல்வார்!

கருணாநிதி செய்வதைப்போல, அவர் மகனும் சொல்வதை செய்வான் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றது. எனவே தான், நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன், இப்பொழுது சொன்னது எல்லாம் பெரிய பிரச்னையே கிடையாது.

மருத்துவமனை, சாலை வசதி, தெரு விளக்கு, பேருந்து வசதி, சுகாதாரம் இவையெல்லாம் சின்னச் சி்ன்ன உள்ளூர் பிரச்னைகள். இதற்குப் பல ஆயிரம் கோடிகள் தேவையில்லை. இங்கு உள்ளாட்சி அமைப்புத் தேர்தலை முறையாக நடத்தி மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய உள்ளாட்சி நிதியைப் பெற்று அதற்குப் பிறகு அரசின் துணையோடு அரசின் மூலமாக பெறக்கூடிய நிதியை பெற்று செய்ய வேண்டிய பணிகள் இவை. இவற்றையெல்லாம் சுலபமாக செய்து விடலாம். இது பெரிய பிரச்னை அல்ல.

இதைப் பற்றி நீங்கள் கவலைப்படவும் பயப்படவும் தேவையில்லை. நான் இருக்கின்றேன். அந்த நம்பிக்கை ஒன்று போதும் உங்களுக்கு. ஆனால் அதே நேரத்தில் இன்றைக்கு தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. தயவு செய்து நீங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தினசரி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அதிகம் பார்க்கிறவர்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் நடந்த கொடுமைகள் நாடகங்கள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் மறைந்த பின்பு இப்போது அந்தப் பிரச்னை விசாரணை கமிஷனில் இருக்கிறது.

இதைவிடக் கொடுமை ஒன்று, கொடநாட்டில் நடந்திருப்பதை பத்திரிகைகளில் நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஆனந்த விகடன் ஒரு பெரிய கார்ட்டூன் படம் வரைந்து ஒரு தலைப்பு எழுதி இருந்தார்கள், என்னவென்றால் கொட நாடா? கொலை நாடா? என்ற தலைப்பு முதலமைச்சரின் அறைக்கு வெளியில் போடப்பட்டுள்ளது. அந்த அறையின் வெளியில் ரத்தக்கறையுடன் கால்களும் செல்வது போல போடப்பட்டுள்ளது.

இப்படி ஒரு அக்கிரமம் எங்காவது நடந்திருக்குமா? அதாவது ஜெயலலிதா அவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறைக்குச் சென்றார். அதன்பிறகு தண்டனை வந்ததற்குப் பின் உயிரோடு இல்லாத காரணத்தினால் சிறைக்குப் போகவில்லை. சசிகலா இன்றைக்கு ஊழல் குற்றவாளியாக சிறையில் இருக்கின்றார்.

அங்கு என்னென்ன வசதிகள் கிடைத்தது என்று அந்த செய்திகளெல்லாம் இப்பொழுது வெளிவந்து கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றன. ஆனால், இந்த எடப்பாடியை பொறுத்தவரைக்கும் ஊழல் குற்றச்சாட்டில் மட்டும் அல்ல கொலைகாரனாகக் கூட சிறைக்குப் போக கூடிய காலம் மிக விரைவில் வந்து கொண்டிருக்கின்றது. கொடநாட்டில் கொலைகள் நடந்திருக்கிறது, அக்கிரமங்கள் நடந்திருக்கின்றது, எடப்பாடியும் இதற்குக் காரணமாக இருந்திருக்கிறார் என்று சொன்னால், இதைப் பேசும் என் மீது வழக்குப் போடவேண்டும் அல்லது இதை வீடியோ மூலமாக வெளியிட்ட தெஹல்கா பத்திரிகையைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் மேத்யூ அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு இதற்கு யார் பின்னால் என்று கேட்கின்றார், இதற்குப் பின்னால் வேறு யாருமில்லை நீதான் அந்தக் கொலைக்கு பின்னால் இருந்திருக்கிறாய். எனவேதான், எல்லோரும் சேர்ந்து உன்னை கொலைகாரன் என்கிறார்கள். இதுதான் உண்மை.

இரண்டு நாட்களுகு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ஒரு கூட்டத்திற்குச் சென்று என்ன பேசி இருக்கின்றார் எனச் சொன்னால், அபாண்டமாக என் மீது கொலைக் குற்றம் சுமத்துகிறார்கள் அந்தக் கூட்டத்தில் 500 பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை பார்த்துச் சொல்கின்றார் இந்தக் கூட்டம் முடிந்து நீங்கள் ஊருக்கு போகின்றீர்கள், ஊருக்குப் போகும்போது ஒரு விபத்தில் இறந்து போகிரீர்கள். இறந்து போனால் அதற்கு நான் தான் காரணமா? என்று ஒரு கேள்வி கேட்கிறார் என்றால் இதைவிட ஒரு கேடுகெட்ட முதலமைச்சரை தமிழ்நாடு பார்த்திருக்க முடியுமா?

இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சர் இப்போது, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப் போகிறாராம். அதற்கு கோடிக்கணக்கில் செலவு. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்த போதும் நடத்தினார்கள். முதல் உலக முதலீட்டார் மாநாட்டில் 2.42 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்டு வந்துள்ளோம். அதில், லட்சக்கணக்கான இலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரப் போகிறோம் என வாக்குறுதி கொடுத்தார்கள்.

இப்போது சட்டமன்றத்தில் 80 ஆயிரம் கோடி வந்துள்ளது என்று சொல்லியிருக்கின்றார்கள். 2015-ல் அறிவித்த 2.42 இலட்சம் கோடி ரூபாய்? வந்ததா? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டதா? 4 வருடம் ஆகிவிட்டது. இப்பொழுது இரண்டாவது உலக முதலீட்டார் மாநாடு நடத்துவதற்கு ஒரே காரணம், கொள்ளை அடிப்பதற்கும், கமிஷன் வாங்குவதற்கும் தான்.

ஊரில் இருக்கும் குப்பனையும், சுப்பனையும் கூட்டிக்கொண்டு உட்கார வைத்து சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கிறான், அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறான் என ஒரு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இதுதான் இன்றைய நிலை. ஒரு பழமொழி சொல்வார்கள் “சீனி சக்கரை சித்தப்பா! ஏட்டில் எழுதி நக்கப்பா” என்று. அதுபோல் ஏட்டில் உறுதிமொழியை பார்க்கலாம் அவ்வளவு தான்.

ஆகவே தான் இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த ஆட்சி இருக்கின்றது. இந்த ஆட்சிக்கு பக்கபலமாக ஒரு பாசிச ஆட்சி மதவாதம் பிடித்த ஆட்சி மோடி ஆட்சி.

அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் என்ன சொன்னார், நான் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டாரா? இல்லை. இந்த நிலையில்தான் இந்த இரண்டு கட்சிகளும் இருக்கின்றன.

இந்த இரண்டு ஆட்சியையும் அப்புறப்படுத்துவதற்கு நீங்கள் தயாராக இருங்கள். நீங்கள் தயாராகி விட்டீர்கள், என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அந்த நம்பிக்கையோடு தான் வந்து இருக்கின்றீர்கள். என் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள். அந்த நம்பிக்கை நிச்சயமாக வீண்போகாது. நம்பிக்கையோடு இருங்கள் நான் இருக்கின்றேன். கவலைப்படாதீர்கள் விடைபெறுகிறேன்!

நன்றி வணக்கம்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!