கொடநாடு கொலை விவகாரம்: முதல்வர் பதவி விலக கவர்னர் மாளிகை முன்பு கண்டன போராட்டம்: திமுக அறிவிப்பு

DMK conducting protest on Kodanad Murder case

by Isaivaani, Jan 22, 2019, 17:44 PM IST

கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவர்னர் மாளிகை முன்பு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கொடநாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. மூன்று பேர் விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவர் மீது கொலை முயற்சி செய்யப்பட்டு தப்பி உள்ளார். ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் சொல்லித்தான் கொள்ளை சம்பவத்தில் இறங்கியதாகச் சொல்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இதனை நான் செய்கிறேன் என்று கனகராஜ் தன்னிடம் சொன்னதாக சயன், மனோஜ் ஆகிய இருவரும் சொல்கிறார்கள்.
இதன் பிறகு, கனகராஜ் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகிறார். சயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது மனைவியும், மகளும் இறக்கிறார்கள். சயன் உயிர் தப்புகிறார். கொடநாடு பங்களாவின் சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ்குமார் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்த கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்துகள் ஆனைத்துமே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகிட வேண்டுமென்றும், தமிழக ஆளுநர் முதல்வர் மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என்றும், நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, வரும் 24.1.2019 அன்று காலை 10 மணியளவில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு சென்னை மாவட்ட கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.

You'r reading கொடநாடு கொலை விவகாரம்: முதல்வர் பதவி விலக கவர்னர் மாளிகை முன்பு கண்டன போராட்டம்: திமுக அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை