பாஜகவுக்கு எதிராக தனி அணியைத் திரட்டி வருகிறார் தம்பிதுரை. இந்த அணியில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி உள்ளிட்ட வன்னியர்கள் வாக்கு நிறைந்திருக்கக் கூடிய பகுதி அமைச்சர்களும் கைகோர்க்க உள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி உடன்பாடு ஏற்பட்டால், அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாகச் செயல்படவும் இவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். தம்பிதுரை சொல்லும் வழியில் கே.சி.வீரமணி பயணித்து வருகிறார்.
தன்னுடைய அரசியல் குருவாகவும் அவர் தம்பிதுரையைத்தான் பார்க்கிறார். தம்பிதுரை பேச்சை அவர் தட்ட மாட்டார் என்கிறார்கள் வேலூர் மாவட்டத்தில்.
தேர்தல் கூட்டணி பற்றி தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசிய வீரமணி, ' அம்மாவுக்கு விரோதமாக பாஜகவோடு டீல் பேசுவதற்கு சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். அப்படிச் செய்தால் கட்சி படுதோல்வியை சந்திக்கும்.
இந்தத் தேர்தலில் தொகுதிக்கு ரூ50 கோடி என செலவு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் பணத்தையெல்லாம் ஈபிஎஸ்தான் செலவு செய்ய வேண்டும். அமைச்சர்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், ஒருவருமே தேர்தல் வேலை பார்க்க முன்வர மாட்டார்கள்.
பாஜக ஆட்களோடு சேர்ந்து தேர்தல் வேலை பார்க்க முடியாது' எனப் பேசியிருக்கிறாராம். இதே கருத்தில் சி.வி.சண்முகமும் இருக்கிறார். வன்னியர் பெல்ட்டில் தோற்றுவிட்டால், அடுத்து வரும் தேர்தலிலும் இதே நிலைதான் ஏற்படும். திமுக, காங்கிரஸ் வெற்றிக்கு நாமே உதவிக் கொண்டிருக்கிறோம் எனவும் ஆதங்கப்படுகிறார்களாம் வடபுல அமைச்சர்கள்.
-அருள் திலீபன்