வைரமுத்துவுக்கு இவ்வளவு பிரச்சினை ஏற்பட்ட பின்னரும், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் குரல் கொடுக்காதது ஏன்? என்று இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில், கடவுள் 2 திரைப்படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றுப் பேசிய பாரதிராஜா, “வைரமுத்துவை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறுகிறவர்கள், கடவுளுக்கு எதிரி.
காந்தி கூட அடையாள உண்ணாவிரதம் தான் இருந்தார். இவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார்கள். இது தற்கொலைக்கு சமமானது தானே. அப்படியென்றால், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
எச்.ராஜா, கையிடுக்கில் வெங்காயம் வைத்திருப்பது [அலைகள் ஓய்வதில்லை போல படமெடுத்தவர்கள் என்கிறார். இதே பாரதிராஜாதான் பூணைலை அறுத்தெறிவது போலும் படமெடுத்தேன். இதை பார்த்துவிட்டு அண்ணா, பெரியார் எல்லாம் இப்போது இல்லையே என்று எம்.ஜி.ஆர். வருத்தப்பட்டார்.
எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்ட என்னை, இப்போது விமர்சிக்கும் ஹெச்.ராஜா போன்றவர்கள் அப்போது எங்கே போயிருந்தார்கள்? காஞ்சிபுரம் கோவில் ஒன்றின் கர்ப்பக கிரஹத்தில் நடைபெற்ற அசிங்கத்தை விடவா, வைரமுத்து அவதூறு பரப்பிவிட்டார்.
நீ வைரமுத்துவை காரணம் காட்டி, பூதகரமாக ஆக்கி கொள்ளைப்புறமாக வர நினைத்தால், கனவிலும் நடக்காது. நாங்கள் என்ன மானம் கெட்டு, ரோஷம் கெட்டுப்போயா கிடக்கிறோம்.
தனது பாடலின் மூலம் ரஜினிகாந்த் பட வெற்றிக்கு உதவிய வைரமுத்துவுக்காக, அந்த ரஜினி குரல் கொடுக்கவில்லை” என தெரிவித்தார்.