ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஷால், விரைவில் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து, ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷால், “ஆர்.கே.நகரில் நான் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு திரும்பிய போது, எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அந்த நிமிடமே நான் முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எனது இந்த முடிவுக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், மக்களில் ஒருவனாக இதை கூறுகிறேன். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர். இதனை என்னால் உணர முடிகிறது” என்றார்.
மேலும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரில் சக்திவாய்ந்த தலைவராக யார் வருவார்கள் என கேள்வி எழுப்பிய போது, இருவருமே அவர்களது கொள்கைகளை தெரிவிக்கவில்லை. எனவே அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும் என்றார்.