ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட விசுவாசிகள் எல்லாம் எடப்பாடி ஆட்சி காலத்தில் ஓரம்கட்டப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. அதிமுகவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, பிரசாரக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆகிய பிரிவுகளுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் சீனியர்களை முன்னிறுத்துவார் ஜெயலலிதா.
அவரது மறைவுக்குப் பிறகு தனக்கான விசுவாச கூட்டத்தை உருவாக்கி வருகிறார் எடப்பாடி. தம்பிதுரையின் அதீத பேட்டிகளால் அவரை ஒரேயடியாக ஓரம்கட்டும் வேலைகள் நடந்து வருகிறது.
அதேபோல், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக அறியப்படுபவர் பொள்ளாச்சி ஜெயராமன். சட்டசபையின் துணை சபாநாயகர் என்ற பதவியை அடுத்து, அதிமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளராகவும் இருக்கிறார்.
இவருக்குச் செக் வைக்கும் வகையில் துணைச் செயலாளராக எடப்பாடியின் நம்பிக்கைக்குரிய ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை நியமிக்கப்பட்டிருக்கிறார். நாளையே கட்சித் தேர்தல் வந்தாலும் இன்பதுரை அந்த அணியில் இருப்பது நல்லது என நினைக்கிறாராம் எடப்பாடியார்.
இப்போது உருவாக்கப்பட்டுள்ள அணிகளில் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலைப்படுத்தப்படவில்லை. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களை ஓரம்கட்டிவிட்டு தனக்கு வேண்டியவர்களை அருகில் வைத்துக் கொள்ளும் பணியைத் திறம்பட செய்து வருகிறார் எடப்பாடி' என நொந்து போய் புகார் வாசிக்கின்றனர் பொள்ளாச்சி வட்டாரத்தில்.