ஜோசியம், சமையல், அழகுக்குறிப்புகள் ஆகியவற்றை மட்டுமே அச்சிட்டு நாங்களும் பதிப்பாளர்கள் என புத்தக கண்காட்சியில் ஸ்டால் பிடித்து கல்லா கட்டிக் கொண்டிருந்த பல நூறு பதிப்பகங்களுக்கு இந்த முறை சம்மட்டி அடி கிடைத்துள்ளது என்கின்றனர் பதிப்பாளர்கள்.
சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சி நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே போகிறது. இம்முறை 700-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் போடப்பட்டிருந்தன.
இணைய உலகம் சாமானியர்கள் கைக்கு வராத சில ஆண்டுகளுக்கு முன்பு சமையல், அழகுக் குறிப்புகள் மற்றும் ஜோதிடம் போன்ற புத்தகங்கள் புத்தக கண்காட்சியில் சக்கை போடு போட்டன. இதனை நம்பி ஏராளமானோர் பதிப்பகங்கள் என்கிற பெயரில் களமிறங்கிவிட்டனர்.
ஆனால் காலம் மாறிவிட்டது அல்லவா? மொபைல் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இணைய உலகின் தேடுதல் விவரங்கள் அத்துப்படி.. சமையல் குறிப்புகள், ஜோசியம், அழகு குறிப்புகள் அங்கிங்கெனாதபடி இணைய உலகில் வியாபித்துக் கிடக்கின்றன.
இதனால் மெல்ல மெல்ல இத்தகைய புத்தகங்களின் மீதான மோகம் குறைந்து போனது. அதை இந்த சென்னை புத்தக கண்காட்சி நன்றாகவே எடுத்துக் காட்டிவிட்டதாம்.
மாறாக அறிவுசார் நூல்கள், தேடல்களுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் ஊக்கப்படுத்தக் கூடிய புத்தகங்கள், தத்துவம் சார்ந்த நூல்கள் என ஒரு சீரியஸ் உலகத்தை இந்த புத்தக கண்காட்சி வெளிப்படுத்தியிருக்கிறது. நானும் ஸ்டாலின் போடுறேன்.. கல்லா கட்டிவிடலாம் என நினைத்த பல நூறு பதிப்பகங்களுக்கு இந்த கண்காட்சி மரண அடி கொடுத்திருக்கிறது.
அதே நேரத்தில் இத்தனை நேர்த்தியாக, தரமாக புத்தகம் வெளியிட்டும் வரவேற்பு இல்லையே என வருந்திய பதிப்பகத்தாருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம் இப்புத்தக கண்காட்சி!
மாற்றம் ஒன்றே மாறாதது!