ஜனவரி 29ம் தேதி மும்பை, சண்முகானந்தா கலையரங்கில் நடைபெறுகிறது
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கலந்து கொள்கிறார்.
இவ்விழா குறித்து தமிழர் நலக் கூட்டமைப்பு மகாராஷ்டிராவின் நிர்வாகக் குழு தலைவர் கர்னல் அ.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழர் நலக் கூட்டமைப்பு மகாராஷ்டிரா சார்பில் நமது தமிழர் பண்பாட்டையும், கலாசாரத்தையும் ஊக்குவிக்கும் விதமாக மும்பையில் தொடர்ந்து பண்பாட்டு விழாக்களை நடத்தி வருகிறோம்.
கடந்த முறை மதிப்புக்குரிய முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் சண்முகானந்தா கலையரங்கில் பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களுக்கும், ஏழை பள்ளி மாணவ மாணவியருக்கும், ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சிலருக்கு மேடையிலேயே வேலைவாய்ப்புக்கான உறுதிகள் பெற்றுத் தரப்பட்டது.
அதே போன்று இந்த ஆண்டும் ( 2018 ) ஜனவரி 29ம் தேதியன்று பொங்கல் விழாவை பிரமாண்டமான முறையில் கூட்டமைப்பின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கேப்டன் இரா. தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் நடத்திட முடிவு செய்திருக்கிறோம். இந்த விழாவிலும் வழக்கம் போல சமுதாயத்தின் பல தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழர் நலக் கூட்டமைப்பு மகாராஷ்டிரா முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த விழாவில் துறைகள் சார்ந்து சாதனை படைத்துள்ள மராத்திய மண்ணில் வாழும் தமிழர்களையும், நமது பெருமைகளை நிலைநாட்டி சாதனை படைத்து வரும் நமது பெரியோர்களையும் சான்றோர்களையும் கவுரவிக்க முடிவு செய்துள்ளோம். இப் பெருவிழாவிலும் மதிப்புக்குரிய முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் அவர்கள் கலந்து விழாபேருரையாற்ற மனமுவந்து இசைந்துள்ளார்.
முதல்வருடன் பல அறிஞர்களும் அரசுத்துறை அதிகாரிகளும் விழாவில் பங்கேற்கிறார்கள். விழாவின் முக்கிய அம்சமாக ‘தெகிடி’, ‘சேதுபதி போன்ற வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ள பிரபல இளம் திரைப்பட இசையமைப்பாளரான நிவாஸ் தலைமையிலான இசைக்குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெறவுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது போன்று மேலும் பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகளும் இந்த விழாவில் இடம்பெறும். மொத்தத்தில் இந்த விழா அனைவரையும் கவுரவிக்கும் விதமாகவும் மகிழ்விக்கும் விதமாகவும் அமையும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.
இந்த மாபெரும் பொங்கல் விழாவில் தமிழன்பர்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.