ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் முடங்கி கிடக்கிறது.
இதனால் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் முதல் அனைத்து மாணவர்களும் பாதிப்படைந்துள்ளனர். ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் மூலம் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ள அரசு, அதற்கான விண்ணப்பங்களை பெற்றுள்ளது. ஆனால் பாதிக்கபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் பணிக்கு வராதவர்கள் நீக்கப்படுவார் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்களுக்கு அதிமுக எம்எல்ஏ ஒருவர் பாடம் நடத்தினார். ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள வதியன் கொட்டாய் அரசுப் பள்ளிக்குச் சென்ற கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொள்ள சென்றார்.
அப்போது ஆசிரியர்கள் வராததால் பள்ளி வளாகம் பூட்டப்பட்டிருந்தது. உடனே பூட்டி இருந்த பள்ளியை திறந்து வெளியே நின்றிந்த மாணவர்களை வகுப்பறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆரம்பித்தார். மாணவர்களை அம்மா என கரும்பலகையில் எழுத வைத்தும், ஆங்கிலச் சொற்களை எழுத வைத்தும் பாடம் நடத்தினார்.