பன்னீர்செல்வத்துக்கு எதிராக, 'கையை வெட்டுவேன்' என்றெல்லாம் பேசி சசிகலாவின் கவனத்தை ஈர்த்தவர் வி.பி.கலைராஜன். ஜெயலலிதா இருந்தவரையில், மாவட்ட செயலாளர் என்ற அந்தஸ்தைத் தாண்டி மந்திரி பதவியைப் பெறுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தார்.
அதற்கு முட்டுக்கட்டை போட்ட ஒரே பெருமை, மன்னார்குடி கோஷ்டிகளையே சேரும். இப்போது வெற்றிவேலோடு முட்டி மோதிக் கொண்டிருப்பதால், எந்த நிகழ்ச்சியிலும் ஆர்வத்தோடு அவர் கலந்து கொள்வதில்லை.
தி.நகர் எம்எல்ஏ சத்யாவின் ஆட்டத்தால், கலைராஜனின் செல்வாக்கு தொண்டர்கள் மத்தியில் காணாமல் போய்விட்டது. இதனால், காலையில் எழுந்ததும் செய்தித்தாள் படிப்பது, புத்தகங்களைப் படிப்பது, மதியம் சிறிது உறக்கம் என அவரது அன்றாட அலுவல் மாறிப் போய்விட்டது.
அவரைத் தேடி வருகிறவர்களிடம், ' அவங்களுக்குள்ளேயே (சசிகலா குடும்பம்) ஒற்றுமை இல்லை. நாம எதாவது பேசப் போய் வம்புதான் வரும். நேரம் வரும்போது பார்ப்போம். அதுவரைக்கும் இருக்கறத காப்பாத்திக்க வேண்டியதுதான்' எனப் புலம்பி வருகிறாராம்.
அருள் திலீபன்