போராட்டத்தின் போது பணிக்கு வராத ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
பணிக்கு வராத நாட்கள் குறித்து கணக்கெடுக்கப்படுவதால் ஜனவரி மாதத்திற்கான ஊதியம் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் 8 நாட்கள் பள்ளிகளுக்கு பெரும்பாலான ஆசிரியர்கள் வரவில்லை. அரசு அலுவலகங்களிலும் ஓரளவுக்கே பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் கிடையாது என அரசு அறிவித்துள்ளதால் ஜனவரி மாதத்திற்கான ஊதியம் எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக மாதத்தின் கடைசி நாளில் அவரவர் வங்கிக்கணக்கில் தொகை வரவாகி விடும். சம்பந்தப்பட்ட கருவூலகங்களில் ஒரு வாரம் முன்பே பட்டியலும் தயாராகி விடும். ஆனால் இந்த மாதம் எந்தக் கருவூலத்திலும் இதுவரை பட்டியல் தயாராகவில்லை எனக் கூறப்படுகிறது.
ஸ்ட்ரைக் நாட்களில் பணிக்கு வராதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகே சம்பளக் கணக்கு எனக் கூறப்படுவதால் பிப்ரவரி 10-ந் தேதி வரை தள்ளிப்போகலாம் என்று கூறப்படுவதால், ஒழுங்காக பணிக்கு வந்த ஊழியர்களும் கலக்கத்தில் உள்ளனர்.