பேருந்து பயணச்சீட்டு கட்டணங்கள் அதிரடி உயர்வு: நாளை முதல் அமல்

by Isaivaani, Jan 19, 2018, 22:38 PM IST

சென்னை: தமிழக அரசுக்கு சொந்தமான பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயர்த்தி, இது நாளை முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நகர மாநகர பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளுக்கான அதிகபட்ச கட்டணம் ரூ.12ல் இருந்து ரூ.19ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் அதிகபட்ச கட்டணமாக ரூ.23 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகளில் அடிப்படை பேருந்து கட்டணத்துடன் 20 சதவீதம் அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்தில் 30 கி.மீக்கு தற்போதைய கட்டணம் ரூ.17ஆக இருந்தது. ஆனால், மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டணம் ரூ.24ஆக அதிகரித்துள்ளது.

அதிநவீன சொகுசு இடைநில்லா பேருந்து மற்றும் புறவழிச்சாலை இயக்க பேருந்து கட்டணம் 30 கி.மீக்கு ரூ.18ல் இருந்து ரூ.27ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வால்வோ பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.33ல் இருந்து ரூ.51 ஆக உயர்கிறது.

இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளுக்கும் இந்த கட்டண உயர்வு செல்லும் என கூறப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வின்படி சுங்கவரி மற்றும் விபத்து காப்பீட்டு வரியும் பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்பட உள்ளது.

You'r reading பேருந்து பயணச்சீட்டு கட்டணங்கள் அதிரடி உயர்வு: நாளை முதல் அமல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை