அதிமுக மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையை திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி புகழ்ந்து பேசியுள்ளார்.
அதிமுக மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை சமீப காலமாகவே மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக குரல்கொடுத்து வருகிறார். அதிமுகவில் உள்ள பல தலைவர்களும் பாஜகவுடன் கூட்டணி என்கிற ரீதியில் அக்கட்சித் தலைவர்களை அணுக ஒன் மேன் ஆர்மி போல் பாஜகவை ஒற்றை வெளுத்து வாங்கி வருகிறார். அதற்கு உதாரணமாக `தமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுகவுடன் கூட்டணி அவசியம்' என வெளிப்படையாக ஆடிட்டர் குருமூர்த்தி பேச, ``பாஜகவை தூக்கி சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்திருக்கிறோமோ" என்று பதில் கவுண்டர் கொடுத்து குருமூர்த்தியின் பேச்சை ஆஃப் செய்தார் தம்பிதுரை.
இதேபோல் ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸும், திமுகவும் மட்டுமே பாஜகவுக்கு எதிராக குரல்கொடுக்க, மக்களவையில் அவர்களுக்கு போட்டியாக தம்பிதுரையும் களத்தில் இறங்கி பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார். அவரின் பேச்சை மேஜையை தட்டி பாராட்டினார் ராகுல் காந்தி. இதே நிலைப்பாட்டை தான் பாஜக கொண்டுவந்த உயர் சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு விஷயத்திலும் கடைபிடித்தார். இப்படி ஒற்றை ஆளாக அதிமுகவில் இருந்துகொண்டு பாஜகவுக்கு எதிராக கம்பு சுத்தி வருகிறார் தம்பிதுரை.
இதனால் இவரை புகழ்ந்து பேசியுள்ளார் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கனிமொழி, தம்பிதுரை குறித்த கேள்விக்கு, ``தவறான கட்சியில் வாஜ்பாய் எப்படி இருந்தாரோ அதேபோல் தம்பிதுரை தமிழகத்தில் அ.தி.மு.க-வில் உள்ளார். மத்திய பா.ஜ.க பற்றி தம்பிதுரைக்கு புரிந்த உண்மை விரைவில் அவரது கட்சியினரும் புரிந்துகொள்வர்” எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் அதிமுகவும், திமுகவும் எதிரணி தலைவர்களை பாராட்டுவது அரிதான விஷயம். இதனால் இருவரது தொண்டர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.